பெண்களும் ஆடைகளும் ஒழுக்க ரீதியான பார்வையும்
ஆடைகள் மற்றும் கலாசாரம் என்றாலே பெண்கள் தான் எமது சமூகத்தில். இது ஒரு நல்ல விஷயமே. விதவிதமான ஆடைகளும் அணிகலன்களும் அவர்களை தேவதைகளாகவே மாற்றிவிடுகின்றன. பெண் பிள்ளைகள் பிறந்திருக்கும் இல்லங்களின் மகிழ்ச்சிக்கு இதுவும் ஒரு காரணம். இல்லத்து அழகை பெண் மேலும் மெருகூட்டுவாள் பல வழிகளில், அதில் ஒன்று அவளுடைய ஆடையும் அலங்காரமும்.
ஆனால் வசதி அல்லது சௌகரியம் என்று பார்ப்போமானால், என்ன காரணங்களுக்காக வேட்டி இன்று வேலைத்தளங்களில் இல்லையோ, அதே காரணங்களுக்காக சேலையைத் தவிர்க்க வேண்டியிருந்தாலும், முடியாத சூழ்நிலை காணப்படுகிறது.

பெரும்பாலான வேலைத்தளங்கள் காலை எட்டு மணி முதல் மாலை ஆறு மணி வரையானாலும் பெண்களுக்கு சேலை அலுவலக உடையாகவும் இருக்கிறது. ஒரே இடத்தில் இருந்து வேலை செய்பவர்களாக இருந்தால் ஓரளவுக்கு சமாளிக்கும் திறன் வந்துவிடுமோ என்னவோ.
சேலை எவ்வளவு அழகான ஆடையோ, அவ்வளவு ஆபத்தானதும் தான். பஸ் பிரயாணங்களில், இருசக்கர வாகனங்களில் சேலையுடன் பயணித்திருப்பவர்கள் இதை நன்றாக அறிந்திருப்பர். எல்லா வகையான வேலைகளுக்கும் சேலை பொருத்தமான ஆடை அல்ல, இருந்தாலும் சேலை பாதுகாப்பானது தான் என்கிற எண்ணப்பாடு சமூகத்தில்
இருக்கின்றது.
சேலை அல்லது சுடிதார் அல்லது குர்த்தா அல்லது வேறு உடலை மூடும் ஆடைகள் அணிவதால் ஒரு குடும்பப் பாங்கான தோற்றம் ஆண்கள் மத்தியில் ஏற்படுவதாக ஒரு தோற்றப்பாடு ஏற்படுகிறது. இது தோற்றம் தானே தவிர நூறு சதவிகிதம் இப்படித்தான் என்று ஆகிவிடாது. சாதாரணமான ஏற்றுக் கொள்ளத்தக்க நவீன ஆடைகளுக்கும் அணிபவர்களின் உள்ளத்திற்கும் எந்த தொடர்பும் கிடையாது. அதாவது அப்படி ஆடைகளைஅணிபவர்களினுடைய தராதரம், குடும்பப் பாங்கு தலைகீழாகத் தான் இருக்கும் என்று யூகமாக சொல்ல முடியாது.
ஆடைகள் காரணமாகவே அவர்களை தவறாக எடை போடுவதும், தவறான நோக்கத்துடன் அணுகுவதும் முறையற்ற செயல். பெண்கள் எப்படி ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறார்களோ, அதே ஒழுக்கம் ஆண்களுக்கும் தெரிந்திருப்பது என்பது கல்வி, சமூக ரீதியான மாற்றத்தின் மூலம் ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும்.
அதீத பாலியல் உணர்வுகளைத் தூண்டக் கூடியதாக அறியப்படும் ஆண் பெண் இரு சாராரது ஆடைகளையும் நாம் வரவேற்கவில்லை. ஆனாலும் எல்லோருடைய ஆடைத்தெரிவுகளும் பொதுவாக பல விளம்பரங்கள், சினிமா, தொலைக்காட்சி இதர காரணங்களால் அமைகின்ற போது எல்லோரும் பொதுவாக தாம் அழகாகத் தெரிகிறோம் என்ற எண்ணம் காரணமாகவே அவற்றைத் தெரிவு செய்கிறார்கள்.
பாலியல் உணர்வு என்பது தனிநபர்களுக்கிடையில் வேறுபாட்டைக் கொண்டது; மேலும், ஆடை பற்றியதாக அணிந்து செல்பவரின் எண்ணமும் பார்க்கின்றவர்களின் எண்ணமும் ஒரே மாதிரி அமைவதில்லை; அதாவது ஒரு நபரைப் பார்த்தவுடன் ஏற்படும் இச்சை முறையான ஒன்றாக இருக்காது என்ற பகுத்தறிவு தான் எம்மை மனிதர்களாக வைத்திருப்பது; ஏன் இவ்வாறு சொல்கிறோம் என்றால், அணிந்து செல்பவரின் எண்ணத்தில் அவ்வாறான எந்த சிந்தனையும் இல்லாமலும் இருக்க முடியும்.
எடுத்ததுக்கெல்லாம் பெண்களின் ஆடைகளை குறை கூறுவதனால், ஆடைகள் சார்பாக எழும் சாட்டுக்கள், பாலியல் குற்றங்களின் உண்மையான அளவு மட்டத்தை குறைத்து விடும் போக்காகக் காணப்படுகிறது. பல நேரங்களில் குற்றங்களை பாதிக்கப்பட்டவருக்கெதிரான கருத்துக்களைத் திணிப்பதற்காகவென்றே இந்த சாட்டுக்கள் பயன்படுத்தப்படலாம்/பயன்படுத்தப்படுகிறது.
இவ்விதம் உணர்வுகளைத் தூண்டும் பல செயற்பாடுகளை சமூகத்தில் ஆடை விடயம் தவிர்த்து வேறு வழிகளிலும் காணலாம். இன்னும் ஆழமாக நோக்குவோமானால், காதலாடலைக் காட்டும் சினிமா காட்சியை திரையரங்குகளில் குடும்பத்தோடு சேர்ந்து பார்க்கும் அளவிற்கு சமூகம் இன்று பக்குவமும் அடைந்து வருவதாகக் கூட ஒரு அபிப்பிராயத்தை முன்வைக்க முடியும்.
ஆக பெண்களும் அவர்களின் ஆடைகளும் தொடர்பாக ஒரே வரைபுக்குள் அவர்களின் ஒழுக்கத்தை கொண்டு வர முடியாது. மேலும், கவர்ச்சி, வயதும் அடையும் , நாகரிகம் உத்தி, வியாபார உத்தி, கலாசாரப் பகிர்வு போன்ற விடயங்களை ஏற்கனவே உள்ள பகுதிகளில் ஆராய்ந்திருப்பதனால் இங்கே அவை பற்றி இங்கே குறிப்பிடப்படவில்லை.
– முற்றும் –
பகுதி 3 – மேலைத்தேய நாகரிகத்தின் செல்வாக்கு
பகுதி 4 – கவர்ச்சியும் ஆடைகளும்
பகுதி 5 – ஆடை நாகரிகம் என்பது ஓர் வியாபார உத்தி
பகுதி 6 – புலம்பெயர்ந்தோர் வருகையும் பல்தேசக்கலாச்சாரத்தின் பரவுகையும்
பகுதி 10 – திருமண வைபவங்கள், மற்றும் கலாசார நிகழ்வுகளில் ஆடைகள்






