ஆடைகளை அறிந்து அணிவோம் – பகுதி 6

பகுதி 6 – புலம்பெயர்ந்தோர் வருகையும் பல்தேசக்கலாச்சாரத்தின் பரவுகையும்

எமது கலாசாரப்பின்னணியைக் கொண்டவர்களே தான் புலம்பெயர்ந்து அந்தந்த கலாசாரப்பின்னணிகளுக்காக தம்மை மாற்றிக் கொண்டவர்கள். அங்கேயுள்ள வாழ்க்கை முறைக்கும் வசதிக்கும் ஏற்ப தம்மை மாற்றிக் கொண்டவர்கள். அங்கீகாரம் என்று முன்னைய பகுதிகளில் சொன்னது இங்கும் , இவர்களுக்கும் பொருந்தும்.

சரி, அவ்விதம் வெளிநாடுகளில் வாழும், எமது உறவினர்கள் பரிசாகக் கொண்டு வரும் கண்கவர் ஆடைகளில் தெரியும் அவர்களின் அன்பும் ஓர் ஆத்ம திருப்தியும் அளப்பரியது; மேலும்
வெளிநாட்டு ஆடை அணிகலன்களின் தரமும் ஸ்டைலும் எம்மைக்கவரக் கூடியவையாக இருக்கலாம். நாமும் அவர்கள் போல் அணிந்து கொள்ளலாம் என்று விரும்புவது இயல்பு. இது நல்லதும் தான்.

ஆனால் எங்கு எதை அணிவது என்பதில் கொஞ்சம் சிரத்தையுடன் இடத்திற்கு தகுந்தாற்போல் அணிய வேண்டியது அவசியம் ஆகும். நமது வாழ்க்கைமுறைக்கும் காலநிலைகளுக்கும் ஏற்றாற் போல் பார்த்துக் கொள்வது மிகவும் நல்லது.

இது இவ்வாறிருக்க, புலம்பெயர்ந்துள்ள ஒரு சிலர், இங்கு வரும் சமயங்களில், இங்குள்ள மக்களின் ஆடைகளை விமர்சிப்பது வழக்கம். இது ஒரு தவறான போக்காகும். ஆடைகளை மட்டுமன்றி, வாழ்க்கைமுறைகள், வேலைகள், வசதி வாய்ப்புக்கள் எல்லாம் இதில் அடக்கம். இந்தப் பகுதியில், நாம் ஆடை அணிகலன்களை மட்டும் எடுத்துக் கொள்வோம்.

இங்கே உள்ள மக்களின் சிந்தனைகளில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியை இவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இங்கே, வாழும் மக்கள், எந்தெந்த சூழ்நிலைகளைக் கடந்து வாழ்ந்து வந்திருக்கிறார்கள் என்பதோ, இப்போது அவர்கள் என்னென்ன வகையாக வாழ்க்கையை எதிர்கொள்கிறார்கள் என்பதோ பரீட்சார்த்தமாக அறிந்திருக்க வாய்ப்பில்லை. அவர்கள் ஏன் புலம்பெயர்ந்தார்கள் என்பது கூட, மறந்தே தான் போயிருக்கக் கூடும். எமது மக்களும் வெளிநாடு என்றால் ஏதோ ஓர் தகுதி என்று நினைப்பதும் தம்மைத் தாமே தாழ்த்தும் அளவிற்கு கூட சென்று விடுகிறது.

புலம்பெயர்ந்தோர் எல்லோரும் அப்படியானவர்கள் அல்லர். இவர்களால் நன்மைகள் எவ்வளோ
இருக்கிறதே என்றால் நிச்சயமாக இருக்கிறது. ஆனால், நேர்மாறான வகையிலும் நம்மைப் பாதிக்கும் விடயங்கள் இருக்கத்தான் செய்கின்றன.

அவர்களின் அந்தந்த நாடுகளில் நடைபெறுகின்ற,எமது கலாசாரம் தொடர்பான விழாக்களில் அவர்கள் பங்கு பெறுகிறார்கள் என்றால் எமது சமூகப் பின்னணியை அங்கேயும் காணலாம். இதற்காக அவர்கள் செய்யும் செலவும் கூட கொஞ்சம் பெரிதாகவே இருக்கலாம். மேலும், சுற்றுச்சூழல் மற்றும் சுவாத்தியம் காரணமாக ஆடைகளுக்கு மேல் ஆடைகள் அணிவதையும் காணலாம்.

ஆனால், எமது பிரதேசங்களுக்கு வரும் போது அவர்கள் எவ்விதம் ஆடைகள் அணியவேண்டும் என்று தெரிந்திருந்தும், குறைவான ஆடைகளை பயன்படுத்துவதும், அதனை உயர்வாகக் கதைப்பதும் காணக் கூடியதாக இருக்கின்றது. விதிவிலக்கானவர்கள் இருந்தாலும் இது ஒரு பொதுவான உண்மையாகக் காணப்படுகிறது. இதையெல்லாம் பார்த்து இளம் பராயத்தினர் மனம் அலைபாயவேண்டிய அவசியம் இல்லை.

சில உண்மைகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும். புலம்பெயர்ந்த பெரும்பாலானோர் இலங்கைக்கு வருவது ஒரு சுற்றுலாவுக்கே. சுற்றுலா எனும் போது உறவினர்கள், விழாக்கள்,
உல்லாசப்பயணம், சொத்து விடயம், அடுத்த தலைமுறைக்கு நாம் வாழ்ந்த தேசத்தை பார்க்கும் வாய்ப்பை ஏற்படுத்துதல், நண்பர்கள், திருமணம் இவ்வாறான காரணங்கள் எல்லாவற்றையும் சேர்த்துதான் சொல்கிறோம். இதை ஏன் இங்கே சொல்ல முனைகிறோம் என்றால், அவர்கள் வாழ்வியலில் ஏற்பட்டுள்ள மாற்றமானது பொதுவாக மீள அவர்களை எமது தேசத்திற்கு நிரந்தரமாக அழைத்து வர வாய்ப்புக்கள் குறைவு. அப்படி அவர்கள் வந்து வாழ்வதாக இருந்தாலும், பெரும்பாலும் மீண்டும் எமது வாழ்வியலுக்கு ஏற்ப அவர்கள் காலத்துடன் மாறத்தான் போகிறார்கள்.

cloth collection

பெரும்பாலான வளர்ந்த நாடுகளில் ஆடைகள் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்படுவதில்லை; எமது தோற்றம் விமர்சனத்திற்கு ஆளாக்கப்படுவதில்லை. இது பல நாடுகளில் சட்டத்தாலும் கையாளப்படுகிறது. பல நாடுகள் இன்று பல்சமூகப்பின்னணியைக் கொண்டவை; பல்சமூக ஆடைகளும் அங்கங்கே அங்கீகரிக்கப்பட்டுத்தான் இருக்கின்றன. இருந்தாலும், எமது வசதிக்காகவும் வேலைக்காகவும் அங்கீகாரத்திற்காகவும் நாம் அங்கங்கே மாறியிருக்கிறோம் அவ்வளவே.

தத்தம் நாடுகளில் விமர்சிப்பது தவறு என்று தெரிந்தவர்களுக்கு இங்கே விமர்சிப்பது தவறு என்பது தெரிவதில்லை என்பது வருந்தத்தக்கது.

இந்த இடத்தில் சில ஆதங்கங்களையும் சொல்லியாக வேண்டும். பழைய மாணவர்களாக தத்தமது பாடசாலைகளுக்கு செல்லும் போது தங்கள் வருகை, தங்கள் தோற்றம் ,தங்கள் பாசை, தங்கள் உடை பாவனை எல்லாம் இளம்பராயத்து மாணவர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை இவர்கள் மறவாதிருக்க வேண்டும்.

இம்மாணவர்களே எமது எதிர்கால சந்ததியினர் ஆவர். புலம்பெயர்ந்தோர் பலர் தமது பிள்ளைகளுக்கு எமது மொழி மற்றும் கலாச்சாரத்தை புகுத்துவதற்கு அரும்பாடுபடுவோராக இருக்கிறார்கள். ஆனால் இங்கே, எமது சந்ததியினர் தேவைக்கு அதிகமாக வேறு விதமாக எமது பிள்ளைகள் மாறிவிடக்கூடாதே என்று அங்கலாய்க்கும் பெற்றோர் இருக்கிறார்கள். இந்த வேறுபாட்டை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆகவே, பாடசாலைகளுக்கு இவர்கள், செல்லும் வேளை, தத்தமது சரியான ஆடைத்தயார்ப்படுத்தலுடன் செல்ல வேண்டும்; மேலும், மிக முக்கியமாக முன்அனுமதி பெற்றுச் செல்ல வேண்டும். நான் வெளிநாட்டில், இருந்து வந்திருக்கிறேன், நான் இந்த தேதியில் பயணம், பின்னர் வர நேரமில்லை, இப்போது நான் என் பாடசாலையைப் பார்க்க வேண்டும் என்று போய்க்கேட்டு சங்கடத்தை உருவாக்காதீர்கள். உங்கள் பாடசாலை இப்போது வேறு பிள்ளைகளின் பாடசாலை. எமது பாடசாலை என்ற உணர்வும், பழைய நினைவுகளை சுமந்தவாறு ஏக்கமும், மீண்டும் ஒரு முறையாவது பாடசாலையைப் பார்த்து விட வேண்டுமே என்ற ஆசையும், எனது பாடசாலைக்கு ஏதாவது நான் உதவ வேண்டுமே என்ற எண்ணமும் நிச்சயமாக தவறல்ல; இதுவே தான் வாழ்க்கையும் கூட. ஆனால், இப்போது அதே பாடசாலையை ,இப்போதைய ஆசிரியர் மாணவர்களை நாம் மதிக்க வேண்டும். உங்கள் பயணத்தைத் திட்டமிடும் போதே உங்கள் பாடசாலைகளுக்கு செல்வதையும் திட்டமிடுங்கள்.

சிந்திப்போம்…செயற்படுவோம்….!!!
நன்றி

Add Comment