ஆடைகளை அறிந்து அணிவோம்… – பகுதி 2

😊 பகுதி 2- ஆள் பாதி ஆடை பாதி

இதுவென்னவோ பழமொழிதான். அதன் கருத்து இன்னும் மாறவில்லை. எமது தோற்றம் மற்றவர்களிடம் நம்மைப் பற்றிய ஓர் விம்பத்தை அவர்கள் மனதில் ஏற்படுத்துகிறது என்று சொல்லலாம். அதனால் நாம் செய்யும் தொழில்களுக்கு ஏற்ப ஆடைகளை தெரிவு செய்து நாளாந்தம் வேலைத்தளத்திற்கு அணிந்து செல்ல முடியும்; சீருடைகள் தரப்பட்டிருந்தால் அவற்றை முறையாகப் பயன்படுத்த முடியும்; மேலும் அங்கே கலந்துரையாடல்கள், விழாக்கள், விருது வழங்கும் விழாக்கள், கொண்டாட்ட நிகழ்வுகள் நடைபெறுமாயின் அதற்கேற்றாற் போல் அணிந்து செல்ல முடியும். நேர்முகத் தேர்வுகள் என்றாலும் அதற்கேற்ப நேர்த்தியாக ஆடைகளை தெரிந்து அணிந்து கொள்ள வேண்டும். அலுவலகங்களில் முடிந்தால் இவ்வாறான நிகழ்வுகளின் போதோ, நேர்முகத் தேர்வின் போதோ அதற்கான ஆடை முறைகள் dress codes என்ன என்பதை அறிந்து அதற்கேற்ப அணிந்து செல்வது சிறப்பு.

அலுவலகங்களில், வேறு நிகழ்வுகளிலோ பெண்கள் எல்லோரும் சேலையில் ஒளிந்து கொள்ளுங்கள் என்று நாம் சொல்லவில்லை; சுடிதார் அணிந்து ஷோல் என்பார்கள் அதையும் போர்த்துக் கொண்டு வரவேண்டும் என்றும் சொல்லவில்லை. ஆடையும் கலாசாரமும் பெண்களுக்கு மட்டுமே உரியதல்ல. ஆனால், பெண்கள், உங்கள் ஆடை சுதந்திரத்தை, சரியாகப் பயன்படுத்தத் தெரிந்திருப்பதோடு உங்கள் ஆடை உரிமையைப் கேட்டுப் பெற வேண்டிய இடத்தில் பெற்றுக்கொள்ளவும் தெரிந்திருத்தல் வேண்டும். ஏனெனில் சில வேளைகளில் விதிக்கப்பட்ட ஆடை முறைகள் உங்களுக்கு சமூக ரீதியாக அசொளகரியத்தை ஏற்படுத்தக் கூடியதாகவும் இருக்கலாம். சில வேளைகளில் கலாசார போர்வையில் சொல்லப்படும் ஆடைகள் எல்லா இடங்களுக்கும் , எல்லா விதமான அலுவல்களுக்கும், அல்லது போக்குவரத்தின் போதோ அல்லது பாதுகாப்பு ரீதியாகவோ பொருத்தமானதாக இருப்பதில்லை.

fashion-spring-summer-women

அலுவலகங்கள் வேலைத்தளங்களைப் பற்றி சொல்லியாயிற்று. இல்லங்களிலும் மற்ற நிகழ்வுகளிலும் எவ்வாறு ஆடைகளை அணிவது?

இல்லங்களில் அணியும் ஆடைகள்

உங்கள் அன்றாட செயற்பாடுகளுக்கு உகந்தவையாகவும் கால நிலைகளுக்கு ஏற்றவையாகவும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் விருந்தாளிகளுக்கும் நல்ல உணர்வுகளைக் கொண்டு வரக்கூடியவையாகவும் தம்மிடையே ஒருவர் இன்னொருவருக்கு மதிப்பினை ஏற்படுத்தக் கூடியதாகவும் இருந்தால் நல்லது. சில சமயங்களில் இல்லத்துக்கு பொருத்தமானதாகக் கருதப்படும் ஆடைகள் வெளியிடங்களுக்கு பொருந்துவதில்லை. உதாரணமாக அவசர தேவைகள் emergency இல்லாதவிடத்து, பெண்களின் house coatஐ எடுத்துக் கொள்வோமே வெளியிடங்களுக்கு பொருந்தாதல்லவா?

கலாசார நிகழ்வுகளை எடுத்துக் கொண்டால் என்ன வகையான நிகழ்வுக்கு செல்கிறோமோ அதற்கேற்ப நேர்த்தியான ஆடைகளை தெரிவு செய்ய வேண்டும். ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி குழந்தைகளுக்கும் சரி கலாசார ரீதியான நிகழ்வுகளுக்கான ஆடைத்தெரிவுகள் முக்கியமானவையாகும். விலை மதிப்பு, ஃபஷன் மற்றும் ஆடம்பரத்திற்கு அப்பாற்பட்டு அவை எமக்கு பொருத்தமானதாகவும் எமது அழகை மெருகூட்டுவதாகவும் சௌகரியமானதாகவும் நேர்த்தியானதாகவும் இருப்பது சிறப்பு.

ஆடையின் முதல் தார்ப்பரியம் மானம் காத்தல்-இது எங்கே நாகரிகம் என்ற போர்வையில் மறைந்து போகிறது என்பதை நாம் கவனத்தில் கொண்டு ஆடைகளைத் தெரிவு செய்து கொள்ளலாம். இது ஆண்களுக்கும் பொருந்தும். இடத்திற்கு தகுந்தாற் போல் எமது ஆடைகள் அமைவது முக்கியம்.

நன்றி

ஆடைகளை அறிந்து அணிவோம்… – பகுதி 1

Add Comment