ஐரோப்பிய கால்பந்து சங்க தலைவர் தெரிவானார்

கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் சர்வதேச கால்பந்து சங்க (பிபா) தலைவர் தேர்தலில் செப் பிளாட்டர் வெற்றி பெற்றதும் அவர் உள்ளிட்ட நிர்வாகிகள் மீது பல்வேறு நிதி முறைகேடு புகார்கள் எழுந்தன. செப் பிளாட்டர் தனது பதவி காலத்தில் துணைத்தலைவராக இருந்த மைக்கேல் பிளாட்டினிக்கு ஆலோசகராக செயல்பட்டதற்காக கணக்கில் காட்டாமல் ரூ.13 கோடி வழங்கியது பெரும் சர்ச்சையாக வெடித்தது.

இது தொடர்பாக விசாரணை நடத்திய சர்வதேச கால்பந்து சங்க நன்னடத்தை கமிட்டி பிபா தலைவர் செப் பிளாட்டர், பிபா துணைத் தலைவரும், ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றிய (யுஈஎப்ஏ) தலைவருமான மைக்கேல் பிளாட்டினி ஆகியோரை சஸ்பெண்டு செய்ததுடன், இருவருக்கும் தலா 8 ஆண்டு காலம் தடையுடன் அபராதமும் விதித்தது. இந்த நடவடிக்கை கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் எடுக்கப்பட்டது. பிபா அப்பீல் கமிட்டி இந்த தண்டனையை 6 ஆண்டாக குறைத்தது.

அதன்பின்னர் விளையாட்டு தீர்ப்பாயத்தில் பிளாட்டினி அப்பீல் செய்தார். அப்போது அவர் மீதா குற்றச்சாட்டை உறுதி செய்த தீர்ப்பாயம், தடையை 4 ஆண்டாக குறைத்து தண்டனை உறுதி செய்யப்பட்டதையடுத்து பிளாட்டினி (UEFA) யுஈஎப்ஏ தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.

அந்த பதவியை நிரப்புவதற்காக இன்று ஏதென்ஸ் நகரில் தேர்தல் நடைபெற்றது. (UEFA) யுஈஎப்ஏ-ல் அங்கம் வகிக்கும் 55 உறுப்பு நாடுகளில் 28 வாக்குகள் பெற்றால் தலைவராகலாம் என்ற நிலையில், இன்றைய வாக்கெடுப்பில் ஸ்லோவேனியாவின் அலெக்சாண்டர் செபரின் 42 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட நெதர்லாந்தின் மைக்கேல் வான் ப்ராக் 13 வாக்குகளே பெற்றார்.

இதன்மூலம் UEFA-வின் 7-வது தலைவராக (Aleksander Ceferin) அலெக்சாண்டர் செபரின் (வயது 48) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பிளாட்டினியின் எஞ்சிய பதவிக்காலம் வரை அதாவது, 2019ம் ஆண்டு வரை அலெக்சாண்டர் தலைவர் பதவியில் நீடிப்பார்.

new Uefa president, Aleksander Ceferin

Add Comment