நல்ல கணவன் எப்படி இருக்கவேண்டும்?

இது மிகவும் சுலபமானது. ஒரே ஒரு கொள்கை வைத்துக்கொள்ளவேண்டும். அதாவது நான் நல்ல கணவனாக இருப்பேன் என்று. இதில் ஆழமானபிடிப்பு வேண்டும்.
நல்ல கணவர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை இனிப் பார்க்கலாம்…

1. காலையில் மனைவிக்கு முன் நீங்கள் எழும்பி இருந்தால் மனைவி எழும்பும்வரை பார்த்துகொண்டிருக்காமல் நீங்களே தேநீர் போட்டு குடிக்கலாம், முடிந்தால் மனைவிக்கும் சூடாக போட்டு கொடுக்கலாம்.

2. காய்கறிகள் வாங்கி வருவதோடு நிறுத்திக்கொள்ளாமல் முடிந்தால் அவைகளை சமையலுக்குத் தேவையானபடி வெட்டிக் கொடுக்கலாம்.

3. அவ்வப்போது உபயோகித்த பாத்திரங்களை கழுவி துடைத்து அதை வைக்கவேண்டிய இடத்தில் வைக்கலாம்.

4. சாப்பிடும்போது உணவில் உப்பு இல்லை, காரம் இல்லை என்று குறை கண்டு பிடிக்காது, சாப்பிட்டு முடித்த பின் “சாப்பாடு நன்றாக இருந்தது உப்பு தான் எதற்கோ காணாது போல நாளை பார்த்து செய்” என்று அன்பாக சொல்லிப்பாருங்கள் மீண்டும் அந்தப்பிழை நிகழாதவாறு மனைவி பார்த்துக்கொள்வதுடன் உங்களிடமிருந்து பாராட்டைப் பெறவும் முயற்சிப்பாள்.

5. துணி துவைப்பதற்கு வேலைக்காரி வரவில்லையென்று துணிகளை பாத்ரூமிலேயே விட்டு விடாமல் உங்கள் துணிகளைத் துவைத்து காயப்போடும் போது மனைவியின் துணிகள் இருந்தால் அதையும் துவைத்து காயப்போடவும். (உங்களில் உங்கள் மனைவியும் அடக்கம் என்பதை மறக்காதீர்கள்)

6. மனைவிக்கு மிகவும் உடம்புக்கு முடியவில்லையென்றால் ஆபீசுக்கு விடுப்பு போட்டுவிட்டு மனைவிக்குத் தேவையான பணிவிடைகளைச் செய்யவும்.

7. வார விடுமுறையில் ஒருநாள் மனைவியை எங்காவது வெளியில் கூட்டிக்கொண்டு போங்கள், மனம் விட்டு பேசுங்கள், உங்கள் எதிர்பார்புகளை கூறுங்கள்.

8. முடிந்தளவு நீங்கள் அவளிடம் மிகுந்த அன்பு கொண்டுள்ளீர்கள் என்பதை உணர்த்துங்கள், மனைவி உங்களைவிட 100 மடங்கு உங்களிடம் நேசம் செலுத்துவாள்.

9. நீங்கள் எவ்வளவு களைப்பாக வீடு வந்து சேர்ந்தாலும் உணவு உண்டு உங்கள் எல்லா வேலைகளையும் முடித்த பின், படுக்கைக்கு செல்ல முதல் மனைவியுடன் பேச சிறிது நேரம் ஒதுக்குங்கள். அன்றைய நாள் எவ்வாறு அவளுக்கு அமைந்தது?, உங்களிடம் கலந்தாலோசிக்க ஏதாவது விடயங்கள் உள்ளனவா?, உங்களுக்கு அன்றைய நாள் எவ்வாறு அமைந்தது, ஆபிசில் நடந்த விடயங்கள் என்பவற்றை ஆவலுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இந்த முறைகளெல்லாம் கட்டாயம் உங்களுக்கு நல்ல கணவன் பட்டத்தை உங்கள் மனைவியிடமிருந்து பெற்றுத்தருவதோடு அல்லாமல் தன் கணவனைப்போல் நல்ல கணவன் யாருக்கும் அமையாது என்று உங்கள் மனைவி பெருமையுடன் மார்தட்டிக்கொள்வாள்.

Add Comment