தை 2019… புதிய பொங்கல்….
புதிய பிரார்த்தனை……..!!!!!!
கதிரவனே இன்று உன் உதயம்
நெய் மணக்கும் பொங்கல் போல்
எல்லா உயிர்களின் வாழ்விலும்
வசந்தமாய் மணக்க
அருள் தருவாய்…….
ஆதவனே இங்கு பொங்கும்
பால் போல எல்லா
மனங்களையும் நல்ல எண்ணெங்களால்
பொங்கச் செய்வாய் ……
சூரியனே நீ சுட்டெரிக்கையில்
தான் வாழ்வு எமக்கு ஆனாலும் கொஞ்சம் வெப்பத்தையும்
புற ஊதாக்களையும்
கொஞ்சம் குறைத்து
அருள் புரிவாய்….
தினகரனே பானை புதிது
தண்ணீரும் தூயது
ஆனால் நீர்ப்பாசனம்…
புதியதாய் ஏதும்
பிரயோஜனம் தரவில்லை
பழையதும் பலவாறாய் தொலைந்து போனது
திண்டாடும் மக்களுக்கும் கரிசனையைக் காட்டு
இனிமேல் இப்பெரும்பாடு
இல்லாதொழிய செய்யோனே
அருள் தா புதிதாய்…..
ஆதித்தனே பொங்கி வரும் பாலைக் கண்டு மெல்லக்
கூச்சலும் போடுகையில்
பாலுக்காய் செயற்கையில் சினைப்படுத்தி கன்றுக்கும்
ஈனாது தாய் சேயையும் தனிமைப்படுத்தும்
ஆலைகளை எண்ணி
வருத்தமும் தோன்றுகிறது
ஞாயிறோனே அகிலத்தில்
பசு வதைகளையும் காளைக்கும் காளைக் கன்றுகளுக்கும்
செய்யும் கொடுமைகளையும் எண்ணி வேதனை தோன்றுகிறது
சுயநலமாய் அவ்வப்போது மாறும்
மனித மனங்களைக் கொண்டு
இவைகளுக்கு நீ என்னதான்
செய்யப்போகிறாய்…….கனலோனே…
பகலவனே அரிசியை வணங்கி பானையில் இடுவது
என்னவோ இன்று மட்டும் தான்
டைல்ஸ் மதிப்புக் கூடியதால்
சேற்றின் மதிப்புக் குறைந்து போனதல்லவோ
வெய்யோனே ஆக பொங்கல் உழவருக்கு எப்படியோ
மற்றவர்களுக்கு சாப்பிடுவதற்கு
பொங்கல் ….
உன்னை மறந்தே தமிழர் வாழ்கையில் உழவருக்கு நன்றி மாட்டுக்கு நன்றி இன்று மட்டும் தான்….. எல்லோனே
மக்களுக்கு நன்றி என்றால்
என்னவென்று காட்ட வருவாய்…..
மிருதண்டனே கரும்பைக் காணுகையில் பொங்கல்
என்ன பொங்கல் கந்தளாய் தான்
மாயமாய்ப் போனதே…..
உதயனே கஜு மெல்லக் கிள்ளி இடுகையில் இறக்குமதி செய்யப்படும் கஜுகளின் தொகையையும் நினைக்கத் தோன்றுதே….
பரிதியே
இனங்களின் பல்வகைமை
தேசத்தின் பலமென்றறியா மூடர்
மெல்லத் தன்னினத்தையும் சேர்த்து அழிக்கும் மூடர் அரசாய் வருவதைத் தடுத்தருள்வாய்….
தாமரை நாயகனே தெய்வம்
என்று சொல்ல கண்ணால்
நாம் யாரையும் கண்டதில்லை
உலகிற்கு நன்மை வழங்குபவனாக
நீ தான் கண்ணில் தெரிகிறாய்…..
ஆகவே அகிலத்தை இன்னலினின்று
காக்க உன்னை வேண்டுகிறோம் இன்று……






