நியூசிலாந்துடனான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 170 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் முதலாவது டெஸ்ட் போட்டி லார்ட்சில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 232 ரன்னும், நியூசிலாந்து 207 ரன்னும் எடுத்தன. பின்னர் 2–வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 3–வது நாள் ஆட்டம் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 180 ரன் எடுத்து இருந்தது. நேற்று 4–வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி மதிய உணவு இடைவேளைக்கு முன்பு 2–வது இன்னிங்சில் 213 ரன்னில் ஆல்–அவுட் ஆனது, இதைத்தொடர்ந்து 239 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2–வது இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து அணி ஸ்டூவர்ட் பிராட்டின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 22.3 ஓவர்களில் 68 ரன்னில் சுருண்டது. இதனால் இங்கிலாந்து அணி 170 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1–0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இங்கிலாந்து அணி தரப்பில் ஸ்டூவர்ட் பிராட் 7 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இரு அணிகள் இடையிலான 2–வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லீட்ஸ்சில் 24–ம் திகதி தொடங்குகிறது.

Add Comment