நம்பிக்கைதான் காரணம்

ஏழை ஒருவனுக்கு ஒரு நாள், தெருவில் பழங்காலத்து நாணயம் ஒன்று கிடைத்தது. அந்த நாணயத்தின் நடுவில் துளை இருந்தது. துளையிட்ட  நாணயம்  கிடைப்பது அதிர்ஷ்டம் என அவனது முன்னோர் சொல்லிக் கேட்டிருக்கின்றான். அதனால், ‘அதிர்ஷ்டம் என்னைத் தேடி வரும், பணக்காரனாகிவிடுவேன்’ என்று நினைத்தான். அந்த நாணயத்தை தன் கோட்டுப் பையில் போட்டுக் கொண்டான்.

அன்று, அவனுக்கு மற்ற நாளைவிட அதிக வருமானம் கிடைத்தது. ‘எல்லாம்  நாணயம் கிடைத்த நேரம்’ என நினைத்தான். அன்றிலிருந்து அவன் தினமும் கோட்டுப் பையில் இருக்கும் நாணயத்தை தொட்டுப் பார்த்துக்கொள்வான். வெளியே எடுக்கமாட்டான். சில ஆண்டுகளில் பணம், பதவி அனைத்தும் அவனுக்கு கிடைக்கப் பெற்றது.

பல வருடங்களுக்குப் பின், ஒரு நாள் தன் மனைவியிடம்,”அந்த நாணயத்தை பார்க்கவேண்டும் போலுள்ளது” என்றவாறே கோட்டுப் பையில் இருந்து நாணயத்தை எடுத்தவனுக்கு அதிர்ச்சி!

அந்த நாணயத்தில் துளையே இல்லை. துளைக்கு என்னவாகியிருக்கும் என்று குழப்பத்துடன் இருந்தவனைப் பார்த்து அவனுடைய மனைவி சொன்னாள், ”என்னை மன்னியுங்கள். உங்கள் கோட்டு தூசு படிந்திருக்கிறதே என்று வெளியே உதறினேன்.  நாணயம் தெருவில் விழுந்துவிட்டது. தேடியும் கிடைக்கவில்லை. நான்தான் வேறு நாணயத்தை போட்டு வைத்தேன்” என்றாள்.

”இது எப்போது நடந்தது?” என்று கேட்டான். husband-wife-fighting-cartoon

”அந்த  நாணயம் கிடைத்த மறுநாளே” என்றாள்.

அவன் சிந்தித்துப்  பார்த்தான்;‘உண்மையில் அதிர்ஷ்டத்தைக் கொடுத்தது அந்த நாணயம் இல்லை. தன்னுடைய நம்பிக்கைதான்.’ என உணர்ந்து கொண்டான். முன்பைவிட உற்சாகத்துடன் தனது பணியைத் தொடர்ந்தான்.

Add Comment