வெற்றிலையும் ! சுவிங்கமும்!

வெற்றிலையும் நம் கலாசாரமும்

வெற்றிலை மெல்லுதல் வாய்ப்புற்று நோயை உருவாக்கும். இதையெல்லாம் யாருக்கு யார் சொல்வது? புகைக்காதீர்கள், மது அருந்தாதீர்கள் என்று சொன்னாலே யாரும் கேட்பதில்லை. எங்கே வெற்றிலை மெல்லாதீர்கள் என்றால் யார் கேட்கப் போகிறார்கள்?அலட்சியம் என்றால் இலக்கணமே நாம் தான் அல்லவா?

இவர்களுக்கு நாம், வெற்றிலை மென்று சுற்றாடலில் துப்பி வைப்பதால், சூழல் மாசுபடுகிறது என்று சொன்னால் கேட்பார்களா?

எமது நாட்டின் அழகு கெடுகிறது , அல்லது வேறு அபிப்பிராயம் ஒன்றைத் தோற்றுவிக்கிறது என்று சொன்னால் கேட்பார்களா?

போகிற போக்கில் மெல்லுவோம்; மென்றதை அதே போக்கில் துப்பி விட்டால் போகிறது என்று அங்கங்கே பொது இடங்களில், வீதிகளில் எல்லாம் துப்பி வைக்கும் பெருமை எல்லாம் வேறு யாருக்கு வரும்?

வெற்றிலை எமது கலாசாரம் ஆகும் அல்லவா? கலாசாரம் என்ற பெயரில் எவ்வளவு தான் அட்டூழியங்கள் – அதில் இதுவும் ஒன்றாகப் போனதோ? வீதி என்றால் துப்புவதற்கு உரிய இடம் போலவும், ஏதோ அவரவர் வீட்டுக் கழிவறை போலவுமல்லவா இருக்கிறது.

இதை வாசித்தவுடன், இது நமக்கில்லை; நாங்கள் எல்லாம் அப்படி செய்பவர்கள் இல்லை என்று நம்மில் பலர் ஒதுங்குவோம். சரி, தான். பல விடயங்களை கண்டும் காணாமல் இருப்பது போல இது இன்னொன்று.

நமக்கு சட்டம் என்று ஒன்று இருந்தாலே அதை நடைமுறைப்படுத்துவது கடினம். இந்த விடயத்தை எப்படி நடைமுறைப்படுத்துவது? தண்டப் பணம் ஏதாவது செலுத்தும் விதிமுறை உள்ளதா? தண்டப் பணம் தானே செலுத்தி விட்டாற் போகிறது, நமது செயலுக்கு வெட்கப்பட்டு போவோமா- அது தான் நடக்காது அல்லவா?

நம்மில் எத்தனை பேர் , பஸ் ஓட்டுனரோ அல்லது நடத்துனரோ வெற்றிலை மென்று விட்டு, அப்படியே இருந்த இடத்தில் இருந்து எட்டி வெளியில் துப்புவதைத் பார்த்திருப்போம். இது தவறு என்று யாராவது சொல்லியிருப்போமா? சொன்னால் என்ன நடக்கும் ? அவர்கள் எமக்கு ஏதாவது சொல்லிவிடுவார்களோ என்று நினைத்தே நாம் வாய் திறக்க மாட்டோம்.

பொறுங்கள், யார் மேலாவது படக் கூடுமே….யாருக்கு அக்கறை …நம்ம வேலை முடிந்தாற் போச்சு இல்லையா? மேலும் புதிதாக அமைக்கப்பட்ட பஸ் நிறுத்தங்களில் எத்தனை டிசைன் டிசைனாக காய்ந்து போன வெற்றிலைத் துப்பல்களைக் காணலாம்.

கொழும்பு நகரைத் தான் எடுத்துக்கொள்வோமே. நகரை அழகு படுத்துவதற்கு எடுத்த முயற்சியிலும், வெற்றிலை தொடர்பாக எடுக்கப்பட்ட
விழிப்புணர்வு முயற்சியிலும் இது ஓரளவே தான் குறைந்துள்ளது. நமது கலாசாரம் கொஞ்சம் பகுத்தறிவுடன் வளர்ந்து வந்தால் நல்லதல்லவா?

சரி, வெற்றிலையை விடுவோம்; வீதியில், பொது இடங்களில், துப்பக் கூடாது என்று சட்டம் இலங்கையில் இருக்கிறதா என்ன?

சிங்கப்பூர் என்றால் குப்பையே வீதியில் போடக்கூடாதாமே, தண்டப்பணம் செலுத்த வேண்டுமாமே, சுவிங்கம் தடை செய்யப்பட்டுள்ளதாமே…2030 வந்தாலும்……அடடா …..இந்த மலைப்பு மாறாது போலத் தெரியுதே. அது சிங்கப்பூர், இது இலங்கை தானே இல்லையா? நம் நாடு என்றால் ஏதோ
குறைவான தராதரத்தில் உள்ள நாடு என்ற எண்ணம் இருக்கத்தான் செய்கிறது இல்லையா?

சுவிங்கம்

வெற்றிலை ஒரு சாராருக்கு என்றால் சுவிங்கம் இன்னொரு சாராருக்கு; ஒரு வேளை பொருளாதார நிலை மட்டுமே தான் வேறுபடுகிறதோ என்னவோ?மற்றும் படி எண்ணத்தில் எந்த மாறுபாடும் இருப்பதாகத் தெரியவில்லை.

வெற்றிலையின் கதை இப்படி என்றால், சப்பிய சுவிங்கத்தின் கதை எப்படி என்று பார்ப்போமா?

பாதையில் நடந்து போகிறீர்கள், திடீரென்று நடக்க ஏதோ முடியாதது போல் உணர்ந்தால் காலணியில் சுவிங்கம்; பஸ்ஸில் அல்லது புகையிரத ஆசனங்களின் இருக்கைகளில் பார்த்தால் சுவிங்கம், கைபிடிகளில் சுவிங்கம் ; பொது இடங்களில் கைபிடிப்பதற்கு அல்லது எல்லைகளுக்காக வைக்கப்பட்டுள்ள கம்பிகளில் சுவிங்கம்; சாப்பாட்டு ஹோட்டல்களுக்குச் சென்றால் மேசையின் விளிம்போரத்தில் சுவிங்கம்; சில வேளைகளில் பொது இடங்களில் சுவர்களிலும் சுவிங்கம்…. இப்படி இதன் கதை நீளும்.

இன்னோர் விடயம், தனது உணவை தெரிந்தெடுக்கத் தெரியாத சிறு பறவைகளும் இந்த சப்பிப் போட்ட சுவிங்கத்தால் பாதிப்படைகின்றன.இப்படி ஒரு கருத்து, ஒருகாலத்தில் பரவலாகப் பேசப்பட்ட போதும் அதற்கு ஆதாரங்கள் இல்லை என்று ஆராய்ச்சிகள் மூலம் சொல்லப்பட்டது. எவ்வளவுக்கு இந்த ஆய்வினை ஏற்றுக் கொள்ள முடியுமோ, அதை நிராகரிக்கவும் முடியும்.

அட, நீங்கள் வேறு குப்பை, வெற்றிலை, சுவிங்கம் என்று….. சொல்லிக்கொண்டு….. நம் தேசத்தில் தான் அந்து சந்துகளில் சிறு நீரே கழித்து விட்டு வருவோம். யாரும் பார்க்காவிட்டால் ….. வேறு சொல்ல வேண்டியதில்லையே…
நாம் தான் ஏதாவது ஒன்றில் திருந்த வேண்டியிருக்கிறது என்று எடுத்துச் சொன்னால், வேறும் ஒன்று இருக்கிறதே, அது பெரிய விடயமாயிற்றே…. என்று சொல்லித் தப்பித்து விடுவோமே. சரி, இந்த விடயம் பற்றியும் இன்னோர் தடவை ஆராய்வோம்.

அப்படியென்றால், செல்லப்பிராணிகளின் கழிவுகள், கட்டாக்காலி விலங்குகளைப் பற்றி ஒன்றும் நீங்கள் சொல்லவில்லையே, தலைப்பிலேயே காணோமே என்று கேட்பது புரிகிறது. இதை இன்னொரு தலைப்பில் ஆராய்வோம்.

முதலில் மனிதர்களாகத் திருந்துவோம்; திருத்துவோம்; பின்னர் செல்லப்பிராணிகளின் கதைக்கு வருவோம்.

இலங்கையில் எமக்கு ஆரம்பக் கல்வியில் இருந்து பல்கலைக்கழகக் கல்வி வரை இலவசமாகவே வழங்கப்படுகிறது. உலகில் எழுத்தறிவு வீதம் கூடிய நாடுகளில் இலங்கை முன்னிலையில் தான் இன்னும் இருக்கிறது. இது உண்மை என்பதை நடைமுறைப்படுத்துவதில் உதவுவது பொதுமக்களின் கடமையாகும்.

Add Comment