அமெரிக்காவின் மிகப் பெரிய பணக்காரர் ராக்பெல்லர். அவர் தனது வயதான காலத்திலும் கூட ஓய்வின்றி கடுமையாக உழைத்து வந்தார். வியாபார நிமித்தம் பல நாடுகளுக்கும் பறந்து கொண்டே இருந்தார். ஒரு நாள் விமானப் பயணத்தின்போது அருகில் அமர்ந்திருந்த ஒரு வாலிபன் கேட்டான், ”அய்யா, நீங்களோ உலகிலேயே பெரிய பணக்காரர். உங்களுக்கும் வயதாகிவிட்டது. இன்னும் எதற்காக நீங்கள் உழைக்க வேண்டும்?” அப்போது ராக்பெல்லர், ”இப்போது நாம் செல்லும் விமானம் அதிக பட்ச உயரத்தில் பறந்து கொண்டிருக்கிறது அல்லவா? இதற்கு மேல் உயரப் போக முடியாது. இதில் திருப்தி அடைந்து விமானம் ஓடுவதை நிறுத்தினால் என்ன ஆகும்?” என்று கேட்டார். விபத்து உண்டாகும் என வாலிபன் பதில் சொன்னான். உடனே ராக்பெல்லர், ”நம் வாழ்க்கையும் அத்தகையதே. மேலே வந்து விட்டோம் என்று ஓய்வு எடுக்கப்போய் விட்டால் தொழில் நசிந்துவிடும். உழைப்பது என்பது வருமானத்துக்கு மட்டுமல்ல. அது என் மன திருப்திக்கு,உடல் ஆரோக்யத்திற்கு.” என்றார். வாலிபன் இப்போது அவருடைய வெற்றியின் ரகசியத்தை அறிந்து கொண்டான்.







