அன்பு, கருணை, இரக்கம், பொறுமை என்பன அமைதிக்கு வித்திடும்.
பொறாமை, கோபம், அகங்காரம் என்பன தவிர்க்க வேண்டியவை.
மனிதன் தனது எண்ணங்களைத் தன்னுடைய கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டு வருவதன் மூலம் அவற்றைச் சரிவரக் கண்காணித்து நிருவகிப்பதன் மூலம், நன் முறையில் நெறிப்படுத்துவதன் மூலம் செம்மையான எண்ணங்களை உருவாக்கலாம். கெட்ட எண்ணங்களைத் தவிர்த்துக் கொள்ளவும் முடியும்.
சுய கட்டுப்பாட்டின் ஆரம்பம், அடித்தளம் யாவுமே மனக் கட்டுப்பாடுதான். இதைச் சரியாகப் புரிந்து கொள்ளும் மனிதனே தனக்கே தான் விதித்துக் கொள்ளும் பல்வேறு கட்டுப்பாடுகள் நிலைக்கவும் நீடிக்கவும் வழி சமைக்கின்றான்.
மனக் கட்டுப்பாடு தரும் பெரும் விளைச்சல்தான் மன அமைதி மனச் சாந்தி மனத் தூய்மை ஆகும். இந்த நிலையை அடைந்த ஒருவன் கோபம் கொள்ளமாட்டான். எனவே பாவஞ் செய்யச் சந்தர்ப்பம் இல்லை. ஆசை கொள்ள மாட்டான் அதனால் அவனிடம் கவலைகள் இருக்க நியாயம் இல்லை. தோல்வியடையமாட்டான்.
மன அமைதி பெற்ற மனிதன் தானும் நல்லபடி வாழ்கிறான் எடுத்த கருமங்களில் வெற்றியடைகிறான். அவ்வாறே ஏனையோரையூம் வாழ விடுகிறான்; அதனால் வாழ்விக்கிறான். எல்லோருடைய அன்பையும் ஆதரவையும் நம்பிக்கையையும் நல்லெண்ணத்தையும் பெற்றுக்கொள்கிறான். சமூகத்தில் உயர்ந்து நிற்கின்றான்.
ஆக்கம்
செ.கோமலகாந்தி






