இப்போது எல்லாவற்றையுமே ஓன்லைன் மூலம் செய்து விடலாம் என்ற அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது. கையில் இருக்கும் ஸ்மார்ட் போனை வைத்துக்கொண்டே பணப்பரிமாற்றம் உள்ளிட்ட அத்தனை பணிகளையும் செய்து விடலாம். இதனால் மக்கள் வங்கிகளுக்கு செல்வது மிகவும் குறைந்து வருகிறது.
இந்நிலையில், பிரிட்டனில் வாடிக்கையாளர்கள் வருகை குறைந்ததால் மாதத்திற்கு சராசரியாக 60 வங்கிக் கிளைகள் மூடப்படுகின்றன என அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.இங்கிலாந்தில் மக்கள் பெரும்பாலும் ஓன்லைன் மூலமே அனைத்து பரிமாற்றங்களையும் செய்து விடுகிறார்கள். இதனால் அவர்கள் வங்கிக்கு செல்வது வெகுவாக குறைந்து வருகிறது. வாடிக்கையாளர்கள் வங்கிக்கு வராததால் வங்கிகளை திறந்து வைத்துக் கொண்டு காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் பிரிட்டனில் பல வங்கிக் கிளைகள் மூடப்பட்டு வருகின்றன. 2015இ ல் இருந்து 2018 வரை மூன்று ஆண்டுகளில் மட்டும் 2,900 வங்கிக் கிளைகள் மூடப்பட்டுள்ளன. இப்போது மாதந்தோறும் 60 கிளைகள் வரை மூடப்பட்டு வருகின்றன. இதே நிலை நீடித்தால் கிளைகளை மூடுவதின் வேகம் இன்னும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
2014ஆம் ஆண்டுக்குப் பிறகு பொதுமக்கள் வங்கிக்கு வருவது 40 சதவீதம் குறைந்து இருக்கிறது. அதே நேரத்தில்,பொதுமக்கள் ஓன்லைன் மூலம் வங்கிப் பரிவர்த்தனைகள் செய்வது 73 சதவீதம் அதிகரித்திருக்கிறது. இதனால்தான் தொடர்ந்து வங்கிக் கிளைகளை மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் முன்னணி வங்கியான நோட்வெஸ்ட் மட்டுமே 635 கிளைகளை மூடி இருக்கிறது.
எச்.எஸ்.பி.சி. வங்கி 440 கிளைகளையும் லொய்ட்ஸ் வங்கி 366 கிளைகளையும் மூடிஇருக்கின்றன.ஸ்கொட்லாந்து பகுதியில்தான் அதிக அளவில் வங்கிக் கிளைகள் மூடப்பட்டு இருக்கின்றன. ஓன்லைன் வங்கி நடைமுறை வந்ததற்குப் பிறகு பல நாடுகளிலும் இதே நிலைதான் ஏற்பட்டுள்ளது.






