தஞ்சை பெருவுடையார் கோவில் –அறிந்ததும் அறியாததும்

இந்தியாவின் தமிழ் நாட்டில் தஞ்சாவூரில் ஆயிரம் ஆண்டுகள் கடந்த நிலையிலும் கூட இன்றும் வானுயர்ந்து ஓங்கி நிற்பதே தஞ்சை பெருவுடையார் கோவில். அருள்மொழிவர்மன் என்னும் முதலாம் ராஜா ராஜ  சோழனின் அளப்பரிய ஒரு முயற்சியின் பலாபலனே இப்பெரும் கோவில். இதை கோவில் என்று வெறுமனே சொல்லிவிட முடியாது.  மிகவும் நுணுகி ஆராய்ந்து பார்ப்போமாக இருந்தால் இக்கோவில் இன்றைய கட்டடக்கலைக்கு சவாலாகவே அமையும்.

இது ஒரு சமூகத்தின் அதாவது திராவிடம் என அழைக்கப்படும் இந்தியாவின் தென்திசை வாழ் மக்களின் கட்டடக்கலை,கலை ,கலாசாரம் ,நுண்ணறிவு ,மதிநுட்பம் ,செல்வம், செழிப்பு ,ஆற்றல் ,அறிவு என்பவற்றை பிரதிபலிக்கும் சின்னமாகவே பல அறிஞர்களாலும் ஆராய்ச்சியாளர்களாலும் பார்க்கப்படுகின்றது.

கி.பி ஆயிரத்திப் பத்தாம் ஆண்டு இக்கோவில் கட்டப்பட்டது என்பார்கள். ஆயிரத்தி நான்காம் ஆண்டளவில் தொடங்கிய இக்கட்டட நிர்மானம் வெறும் ஆறே ஆண்டில் அதுவும் இன்று போல் விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் அதன் சிகரத்தை தொடாத ஒரு காலத்தில் ஆறு ஆண்டுகளில் பிரமாண்டமாக முடிவுற்றது வியக்கத்தக்க ஒன்றுதான்.

இப் பிரமாண்ட கோவிலை கட்ட ராஜ ராஜ சோழனை தூண்டிய காரணம்தான் என்ன? சிவன் மேல் அவன் கொண்ட தீவிர பக்திமட்டுமா காரணம்? இல்லை, கலைகளின் மேல் அவன் கொண்ட ஆர்வமும் போர்களில் அவன் பெற்ற வெற்றியும் காரணங்களாக அமையலாம் என்கிறார்கள். ஆம் சித்திரக்கலை,நடனக்கலை,சிற்பக்கலைகளின் பிரதிபலிப்பை கோவில் சுவர்களிலும் மாடங்களிலும் காணக்கூடியதாக இருக்கின்றது. மற்றும் போர்களில் பெற்ற செல்வங்களையும் சிறைப்படுத்தப்பட்ட எதிர் வீரர்களையும் நிர்மானத்துக்கு பயன்படுத்தியதாகவும் சொல்லப்படுகின்றது.

Raja raja solan

இக்கோவில் தனியே நீலம்  ஓடிய சிவப்பு படர்ந்த மிகவும் உறுதியான  கருங்கல்லினால் ஆனது. வேறு எந்த கற்களும் கட்டுமானத்தில் பயன்படுத்தப் படவில்லை. உறுதியான இக்கற்களைப் பிளப்பதற்கு பயன் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் தான் என்ன? இன்று போல் கருங்கற்களை பிளப்பதற்கு அன்று அதிநவீன கருவிகள் இருக்கவில்லை. சிற்பங்கள் எவ்வகைபட்ட உளிகளால் செதுக்கப்பட்டன? ஆம் இவையனைத்தும் இன்றும் விடை காணப்படாத வினாக்களாகவே இருக்கின்றன.

தஞ்சை

ஓர் ஆய்வின்படி கோவில் கட்டுமானத்திற்கு அண்ணளவாக  130,000 தொன் கருங்கற்கள் பயன்படுத்தப்பட்டதாக அறியவந்துள்ளது. ஆம் மிகப்பெரிய ஒரு தொகை !! எனினும் கோவிலை அண்டிய இடங்களில் கருங்கல் வளம் இருந்ததாக இன்னும் அறியப்படவில்லை. கோவிலுக்கு அறுபது கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள நர்த்தாமலையில் இருந்து இக்கருங்கற்கள் எடுத்து வரப்பட்டுள்ளன.எப்படி எடுத்து வரப்பட்டன? இன்று போல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பாரஊர்திகளும் கிடையாதே??

ஆம் அவற்றிகெல்லாம் மிகவும் நுட்பமான பொறிமுறைகள் கையாளப்பட்டுள்ளன. பெரிய கற்பாறைகள்,சக்கரங்கள் பூட்டப்பட்ட வண்டிகள் இதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன. மிகவும் பெரிய கற்களை மாடுகள் இழுத்தும் யானைகள் நேம்பியும் கட்டட இடத்திற்கு எடுத்து வந்துள்ளன.

தஞ்சை பெருவுடையார் கோவில்

இன்றும் கம்பீரமாகவும் இக்கோவிலின் தனித்துவத்தை மேலும் மெருகூட்டியும் நிற்பது கற்பக்கிரகத்தின் மேல் ஓங்கி நிற்கும் நூற்று தொண்ணூறு அடி உயரமான விமானமே ஆகும். இவ்விமானத்தின் உச்சியில் அமைந்திருக்கும் கும்பம்(கலசம்) ஆனது சுமார் எண்பது தொன் நிறையுள்ள இரு பெரும் தனிக்கற்களால் ஆனது. இக்கற்களை இவ்வளவு உயரத்திற்கு எப்படி உயர்த்தி இருப்பார்கள்? அதுவும் சாதா கல்கிடையாது பிரமாண்டமான கற்கள். இவ்வினாவுக்கு ஆராய்ச்சியாளர்களாலும் கூட திடமான ஒருபதிலை வழங்க முடியவில்லை. பலர் பல தரப்பட்ட அனுமானங்களை வழங்கினாலும் தர்க்கரீதியாக சில அனுமானங்களே ஏற்றுக்கொள்ளகூடியதாக இருக்கின்றது. பிரமாண்டமான சாய்தளம் அமைத்து இக்கற்கள் மேலே ஏற்றப்பட்டன என சிலர் கூறுகின்ற போதும், எண்பது தொன் நிறையை சாய்தளத்தின் வழியே கொண்டு செல்வது என்பது இலேசான ஒரு காரியம் இல்லை. சாய்தளம் உடைவதற்கான சாத்தியப்பாடுகளே அதிகம். இதற்கு பதில் கூறும் முகமாக சில ஆய்வாளர்கள் கூறும் ஒரு அனுமானம் ஏற்றுக்கொள்ள கூடியதாக இருக்கின்றது. அதாவது இவ்விமானம் எழுப்பப்படும் போது அதனுடன் சேர்ந்து ஒரு கெட்டியான மண்ணாலான ஒரு சுழல் பாதை இரண்டு யானைகள் எதிரும் புதிருமாய் போவதற்கான அகலத்தில் அமைக்கப்பட்டிருக்கும். இப்பாதையின் வழியே மனிதர்களாலும் மிருகங்களாலும் கலசம் மேலே அனுப்பப்பட்டிருக்கும் என்பதேயாகும். ஆகவே கலசம் பொருத்தும் வரையில் வெறும் களிமண் குன்றாகவே விமானம் காட்சியளித்திருக்கும். பின்னர் மெல்ல மெல்ல மண் தினமும் ஆயிரக்கணக்கானவர்களாலும் விலங்குகளாலும் அகற்றப்பட்டிருக்கும். மண் குவிக்கப்பட்ட இடம் இன்றும் இருக்கின்றது என சொல்கின்றனர். ஆம்….மிகவும் ஒரு நுட்பமான பொறிமுறை, இன்றைய பொறியியல் வல்லுனர்களையும் வியந்து பார்க்க வைக்கின்றது ……!!!

nanthi

இக்கோவிலிலே கண்ணைக் கவரும் நந்தி ஒன்றும் உள்ளது. தனியே ஒரு கல்லில் செதுக்கப்பட்டது இதுவாகும். கருங்கல்லில் சிலை செதுக்குவது என்பது சுலபமான காரியம் இல்லை.அதுவும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இப்படி ஒரு நுட்பமான கலை நயத்துடன் கூடிய நந்தி செதுக்கப்பட்டது பிரம்மிக்கத்தக்கது.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களினாலும் ,யானை, குதிரை ,எருமைகளின் உதவியும் கொண்டும் கட்டப்பட்டதால் மட்டுமன்றி, தொழிலாளர்களின் உணவு ,உறையுள், வைத்திய சேவைகள்,சன்மானங்கள்,கட்டுமானத்திற்கான பிரமாண்ட தொகையான மூலப் பொருட்கள் ,கலை ,நுண்திறன் யாவும் எப்படி நிர்வகிக்கப்பட்டன என்ற வினா என்மனத்தில் எழும்பொழுது தஞ்சை பெருவுடையார் கோவிலை என்மனம் தனியே கோவிலாக பார்க்க சம்மதிக்கவில்லை. இது ஒரு நுண்ணிய கட்டடக்கலையின் எடுத்துக்காட்டே ஆகும் என்கிறது.

                                                                                                    ஆக்கம் –சுயோதமி யோகநாதன்  

Add Comment