டெஸ்ட் அரங்கில் அதிகமுறை இரட்டைச் சதம் அடித்தவர்கள் பட்டியலில் முதலாவதாக இருக்கும் அவுஸ்திரேலிய ஜாம்பவான் பிரட்மனின் சாதனையை தகர்க்க இலங்கை அணியின் நட்சத்திர வீரர் குமார் சங்கக்கார நெருங்குகிறார்.
நியூசிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் நியூசிலாந்து வென்றது. இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி வெலிங்டனில் இடம்பெற்று வருகின்றது.
இதில் முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய இலங்கையின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சங்கக்ககார, நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை எளிதாக சமாளித்தார். அபாரமாக ஆடிய அவர், டெஸ்ட் அரங்கில் 38 ஆவது சதத்தை பதிவு செய்தார்.
மறுமுனையில் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, பின்னர் தனிநபராக அசத்திய சங்கக்கரா (203), டெஸ்ட் வரலாற்றில் 11 ஆவது முறையாக இரட்டைச்சதம் அடித்தார்.
இதன்மூலம் டெஸ்ட் அரங்கில் அதிகமுறை இரட்டை சதம் அடித்த வீரர்கள் பட்டியலில், அவுஸ்திரேலிய ஜாம்பவான் பிரட்மனுக்கு (12 முறை) அடுத்து இரண்டாவது இடத்தில் சங்கக்கார உள்ளமை குறிப்பிடத்தக்கது.







