வெளிநாட்டு மோகம், தனிக்குடும்ப வாழ்க்கை, விவாகரத்துகள், தாய், தந்தை இல்லாத குழந்தைகள், ஒருங்கிணைப்பு இல்லாத குடும்பங்கள் போன்றவை அதிகரித்துக் கொண்டே வரும் இக்காலத்தில் இதை தடுப்பதற்கு குடும்பங்களின் ஓற்றுமை எவ்வாறு அவசியமாகின்றது என்பதை இப்போது பார்க்கலாம்…………
இன்றைய நவீன உலகில், வாழ்வாதாரத்திற்காக, சொந்த இடங்களை விட்டு, வெவ்வேறு இடங்களில் பணியாற்றுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. குடும்ப உறுப்பினர்கள் ஒன்றாக இருப்பது அரிதாக உள்ளது. குடும்ப கட்டமைப்பிலும் “விரிசல்’ உருவாகிறது. உலகளவில் சொந்த இருப்பிடத்தை விட்டு, அதிகளவானோர் வெளிநாடுகளில் இடம் பெயர்ந்துள்ளனர். இவர்களது குடும்பம், இவர்களை சார்ந்து உள்ளது. என்ன தான் இவர்கள், குடும்பத்திற்கு வருமானத்தை அங்கிருந்து அளித்தாலும், அருகில் இல்லாதது அவர்களது குடும்பங்களுக்கு ஏமாற்றமாகவே இருக்கும்.
பெரும்பான்மையோர் மனதில் கூட்டுக் குடும்பம் என்பதே ஒரு உன்னதமான் அமைப்பு ஆனால் நிறைவேறாத கனவு எனும் எண்ணமும் இருக்கிறது.
தமது மகன், மருமகள் பேரன் என்று அவர்களுக்கு உணவு அவர்களது வீட்டு வேலை என 60 வயசுக்குப் பிறகும் ஓய்வின்றி உழைக்கும் தாய்மாரை நாம் இன்றும் பார்க்கலாம், அத்துடன் சுமுகமாக செல்லும் குடும்ப உறவுகளை சீர் குலைக்கும் மாமனார் மாமியாரையும் பார்க்கலாம், ஒன்றுமே இல்லாத விடயங்களை பெரிதாக்கி சண்டையிடும் மருமகன், மருமகளையும் பார்க்கலாம்.
இதனால் கூட்டுக் குடும்ப விஷயத்தில் இருக்கும் முரணான நிலைப்பாடுகளை நாம் பார்க்கலாம்.
முதியோர் இல்லங்களில் பெரியவர்களைக் காணும் போது நாம் மிகவும் வருத்தப்படுகிறோம். அவர்களைக் கைவிட்டு விட்டார்களே என்று ஆதங்கப்படுவோம். அதுவே அவர்கள் கூடி வாழ்ந்தால் அவர்கள் வேலை வாங்கப்படுகிறார்கள் என்றெல்லாம் பேசுவோம்.
இன்றைய நிலவரத்தில் கணவன் மனைவி இருவருமே வேலைக்கு சென்றால்தான் வாழ்க்கைச் செலவினை சமாளிக்க கூடியதாக உள்ளது நடுத்தர குடும்பங்களில். எந்த ஒரு தாய் தகப்பனையும் கேட்டுப் பாருங்கள். ஒரு குழந்தையை வளர்த்து ஆளாக்கும் வரை பட்ட பாடு கொஞ்ச நஞ்சமாயிருக்காது. குடும்பத்தை நடத்தி குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பு அடுத்த தலைமுறைக்கு உண்டு. அவர்களுக்கு அந்த நிலையிலும் ஆதரவு தரவே பெற்றோர் விரும்புவர். 20-25 வருடம் தனது குழந்தையே உலகம் என்று வாழ்ந்த பெற்றோர் திடீரென அவர்களது குழந்தையும் வாழ்க்கைத் துணையும் தமக்கு பாரம் என்று உதற முடியுமா? உதற வேண்டுமா?

கூட்டுக் குடும்பத்தையே விட்டு விடுங்கள். வாடகை அதிகமான நகரங்களில் சிறிய வீடுகளில் அடை படும் போது தனிமை அல்லது அந்தரங்கம் என்னும் உரிமை அனேகமாக அனைத்து குடும்ப நபர்களுக்குமே பறி போகிறது இல்லையா? இதனாலும் குடும்பங்களிடையே பிளவுகள் ஏற்படுகிறது.
எனவே பொருளாதாரம் பல விஷயங்களை முடிவு செய்கிறது. ஓரளவு வருவாய் உள்ள பல குடும்பங்களில் அருகருகில் உள்ள குடியிருப்புகளில் பெரியவரும் அடுத்த தலைமுறையும் வசிப்பதைக் காண்கிறோம். இது இரு தரப்புக்கும் உகந்த ஒரு நடுவழியாகப் பல குடும்பங்களில் உள்ள நிலையே.
மாத வருவாய் ஒரு புறம் பல விஷயங்களைத் தீர்மானிக்கிறது. பெற்றோரின் ஓய்வூதியத்தையும் சேர்த்து மகன் திட்டம் இட வேண்டி இருக்கலாம். மகனை நம்பியே ஓய்வூதியம் இல்லாத பெற்றோரும் இருக்கலாம்.
எது எப்படி இருந்தாலும் தனது இடம் இது. தனது முன்னுரிமை இது. தனக்கு முக்கியமானது இது. தனக்கு ஏற்புடையது இது, தனக்கு ஏற்பில்லாதது இது என பெற்றோர் மகனுடன் அல்லது மகளுடன் வாழ்நாளும் நெருங்கிய தொடர்பில் இருக்கவே வேண்டும். அது அவர்களின் கடமை கூட.
குழந்தை வளர்ப்பு குறித்த கருத்துக்கள் பெற்றோருக்குப் பெற்றோர் கண்டிப்பாக மாறுபடும். உண்மையில் சில இடங்களில் மிகவும் பிற்போக்கான குறுகிய சிந்தனை உள்ள தாத்தா பாட்டியின் வளர்ப்பு குழந்தைகளுக்குக் கெடுதலாகவே முடியும். அருகருகே இருக்கும் ஏற்பாடு உகந்தது. ஒரே வீட்டில் பொருளாதாரக் காரணங்களுக்காக இருக்கலாம்.
நீண்ட நாள் அடிப்படையில் எல்லா இடத்திலுமே தன் இடம் இது என நிலைநாட்டி அதே சமயம் தன் பங்கு இது என்பதைக் கண்டிப்பாக நிறைவேற்றும் கடமை உணர்வும் சமமாக இருந்தால் பல மனித உறவுகள் உறுதி பெறும்.
குடும்பங்களுக்குள் ஒற்றுமை இருக்கும் வரை, வாழ்க்கையில் கவலை இருப்பதில்லை.







