உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியில் இந்திய அணி முழுமையாக போராடாமல் எளிதாக தோல்வியை தழுவியது என்று அந்நாட்டு நாளிதழ்கள் விமர்சித்துள்ளன.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதியில் இந்திய அணியை 95 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலியா, இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது. நடப்பு சாம்பியனான இந்தியா கோப்பையைத் தக்க வைக்கக் கிடைத்த வாய்ப்பை நழுவ விட்டது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள டெய்லி டெலிகிராப் நாளிதழ் இந்திய அணியின் வெற்றி வாய்ப்புகள் தோனி மற்றும் விராட் கோலியின் ஆட்டத்தையே நம்பி இருந்தது. ஆனால் இருவரும் ஏமாற்றத்தையே தந்து விட்டதாகவும், கேப்டன் தோனி பேட்டிங்கின் போது கடுமையாக போராடுவார் என எதிர்பாக்கப்பட்ட நிலையில் அவர் எளிதாக விட்டு கொடுத்துவிட்டார் என அந்நாளிதழ் கூறியுள்ளது.
மேலும் ரன் அவுட்டின் போது தோனி டைவ் அடிக்கவோ அல்லது பேட்டை வைத்து தேய்த்துக்கொண்டு உள்ளே வரவோ பெரிய அளவில் முயற்சிக்கவில்லை. அவ்வாறு முயற்சித்திருந்தால் நிச்சயமாக ரன் அவுட்டை தவிர்த்திருக்கலாம் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் தெரிவித்ததாக செய்தி வெளியிட்டுள்ளது டெய்லி டெலிகிராப்.
மற்றொரு முக்கிய நாளிதழான சிட்னி மார்னிங் ஹெரால்ட், மேக்ஸ்வெல்லின் அற்புதமான த்ரோவால் தோனி அவுட் ஆவது வரையில் ஆஸ்திரேலியா பதற்றமாகவே இருந்தது. ஆனால் அவர் ஏன் ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக விளையாடாமல், வினோதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் என்று தெரியவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளது.









