ஒரு துடிப்பு நிறைந்த ஆசிய சமுதாயம் ஐரோப்பிய நாடுகளை பின்னுக்குத் தள்ளிவிட்டு ராஜநடை போடுகிறது. பொருளாதார முன்னேற்றமல்ல அது. ஒரு நாட்டின் பொருளாதாரத் துறையில் நடந்த அதிசயம் அது.
எனவே தான் “என்ன நடந்தது? எப்படி நடந்தது? நாம் என்ன கற்றுக் கொள்ளலாம்?” என்று உலக நாடுகள் ஜப்பானைப் பார்க்கின்றன. அவர்களைப் பற்றி அறிந்து கொள்கின்றன.
மாடு பூட்டாமல் வெறும் வண்டியும் மூக்கணாங் கயிறும் மாத்திரம் தெருவில் ஓடுகிறது என்றால் அது என்ன அதிசயம்! அந்த அதிசயத்தைத் தான் தெருவில் ஓடும் காராகப் பார்க்கிறோம். மாட்டை ஒதுக்கிவிட்டு மாட்டுக்குப் பதில் ஒரு யந்திரத்தை உள்ளே வைத்து விட்டான் மனிதன். விஞ்ஞான தொழில் நுட்பம் பிறந்தது.
அப்படிப்பட்ட விஞ்ஞான தொழில் முன்னேற்றம் வெள்ளைக்காரர்களுக்கே உரியது என்ற நிலையை மாற்றி சற்றே குள்ளமாக இருந்த ஒரு மனித இனம்- நம்மைப் போன்ற ஓர் ஆசிய இனம்- இதை சாதித்திருக்கிறார்கள்.
நம்முள் எழுவது ஆர்வம். “ஆகா! அப்படி நாமும் செய்ய முடியுமா? என் நாட்டை அப்படி உயர்த்த முடியுமா?” என்ற ஆசை, வேகம்.
என்ன ஒரு நாடு அதன் நிலவளத்தினால் நீர்வளத்தினால் அதன் கனிவளத்தினாலா முன்னேறி விடுகிறது? இல்லை. ஒரு நாடு அங்கே வாழும் மக்களின் மனவளத்தினால் தான் முன்னேறுகிறது. ஆர்வம் கொண்ட மக்கள், “செய்யமுடியும்” என்ற நம்பிக்கை கொண்ட மக்கள்தான் சமுதாயத்திற்கு சமுதாயம் வித்தியாசப்படுகிறார்கள்.
இரண்டாவது உலக மகா போரில் தோல்வியுற்று சிறுத்துப் போன ஜப்பானை வீறு கொண்டிடச் செய்தது எது? சில குணங்கள், சில மனித இயல்புகள், சில அணுகுமுறைகள, சில புதிய வழக்கங்கள்.
கடுமையான உழைப்பு : பதினாலு மணி நேரம் உழைக்கும் உழைப்பு.
பொறுமை : பொறுமை என்றால் அப்படி ஒரு பொறுமை. முகத்தில் கூட பதற்றத்தைக் காட்டாமல் ‘ஆங்க்’ ‘ஆங்க்’ என்று எது சொன்னாலும் வாங்கிக் கொள்ளும் அந்தப் பொறுமை, நிதானம்.
சுய கட்டுப்பாடு : ‘பசிநோக்கார் கண் துஞ்சார் எவ்வௌர் தீமையும் மேற்கொள்ளார், கருமமே கண்ணாயினார்’ என்று ஒரு பாடல் தமிழில் உண்டு. பசி, தாகம், தூக்கம், சூழ்நிலையில் நடக்கும் அரசியல் மற்றும் எந்த வேலையும் அவர்களைத் திசை திருப்புவதில்லை. எடுத்ததை முடிக்க வேண்டும், சொன்னதைச் செய்யவேண்டும். முடித்துவிட்டுத் தான் மறுவேலை என்ற தொழில் ஈடுபாடு- அப்படிப்பட்ட மன உறுதி, வைராக்கியம்.
பிறரது உணர்வுகளை மதிக்கும் குணம், மரியாதை, அன்பு, விவாதங்களில் அமைதி, சாந்தம், பிறரைப் புரிந்து கொள்ளும் நல்ல குணம், பிறர் செய்வதில் இருக்கும் நியாயத்தை அவர் கோணத்தில் பார்க்கும் பண்பு, பிறரது உரிமைகளை மதிக்கும் பெருந்தன்மை, ஓடும் ரயிலில் கூட சப்தம் போட்டுப் பேச மாட்டார்கள். நமது ஊரில் சினிமாக் கொட்டகைகளில் பின்புற சீட்டில் அமர்ந்து உரத்து நடத்தும் விமர்சனத்தை அங்கே பார்க்கமுடியாது? அது அவமானம்.
இது தான் அவர்களது வெற்றிக்கு வழி வகுத்த குணங்கள்.






