
நம்மில் பலர் உணவை உண்ணும்போது தொடர்ந்து பேசிக்கொண்டே இருப்போம். நாம் பேசிக்கொண்டே சாப்பிட்டால், உணவு ஜீரணமாகாது. பெரியவர்கள் நாம் சாப்பிடும்போது பேசக்கூடாது என்று சொல்லிக் கொண்டே இருப்பார்கள். ஆனால் நாம் அதை ஒருபோதும் காதுகொடுத்து கேட்பதில்லை. ஆனால் அதற்குப் பின்னால் ஒரு மிகப்பெரிய இரகசியமே இருக்கிறது. அது தெரிந்திருந்தால் அதை கடைப்பிடித்திருப்போமோ என்னவோ….
சாப்பிடும் போது பேசாமல் சாப்பிட்டால் தொப்பை போடாது என்றால் நம்புவீர்களா? ஆனால் அதுதான் உண்மை. இதுபோல் இதற்குள் இன்னும் பல விடயங்கள் ஒளிந்திருக்கின்றன. அப்படி சாப்பிடும் போது ஏன் பேசக்கூடாது என்பது பற்றி இப்போது பார்க்கலாம்.
உணவை உண்ணும்போது ரசித்து ருசித்து சாப்பிட வேண்டும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். அதற்கு சாப்பாட்டின் ருசி நமக்குள் சென்று சேருகின்றது என்று மட்டும் நினைத்துக் கொள்ளாதீர்கள். அதற்குப் பின்னால் சில அறிவியல் ரீதியான காரணங்களும் உண்டு.

நம்முடைய முக அமைப்பிற்கும் நாம் சாப்பிடும் உணவிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டாம். நம்முடைய மண்டை ஓட்டினுடைய அமைப்பானது கபாலத்தினுடைய அடிப்பாகத்தில் தொடங்கி, தொண்டை குரல் வளையில் கீழ்ப்பகுதியில் சென்று முடிகிறதாம்.
வாய்ப்பகுதியில் இருந்து உணவுக்குழாயானது தொண்டை வழியாக வயிற்றுக்குப் போகிறது. அதே போல மூக்கிலிருந்து சுவாசக் குழாயும் தொண்டை வழியாக உணவுக் குழாயைக் கடந்து நுரையீரலுக்குப் போகிறது. இது கிட்டதட்ட நாம் ரயிலில் போகும்போது போடப்படுகிற லெவல் கிராஸிங்கைப் போன்றது.
உணவுப் பாதை என்பது ரயில்வே தண்டவாளம் போல. சாதாரண ரோடைப் போலத்தான் நம்முடைய சுவாசக்குழாய்ப் பகுதியும்(Respiratory tract) எப்போதும் திறந்தே இருக்கும். காற்றும் வந்து போய்க் கொண்டே இருக்கும். ஆனால் உணவுப் பாதை ரெயில்வே பாதையைப் போன்று எப்போதாவது தான் திறக்கும். பின்பு மூடப்படும். அதாவது நாம் உணவு உள்ளே செலுத்தும் போது சுவாசப் பாதை உணவுப் பாதையைத் திறந்து வழிவிடும். உணவு உள்ளே சென்ற பின்பு மீண்டும் அது மூடும். இதுதான் நாம் சாப்பிடும் போது உடலில் நடப்பது.
அதேசமயம் உணவு சிறிதேனும் காற்று உள்ளே செல்லும் சுவாசப் பாதைக்குள் சென்று விட்டால் அது பேராபத்து. அதை வெளியேற்றுவதற்கான நம் சுவாசக்குழாய்(Respiratory tract) எடுக்கும் முயற்சி தான் புரையேறுவது என்று சொல்லுவோம். நீங்கள் உண்ணும் உணவு உங்கள் வயிற்றுக்குச் செல்வதற்குப் பதிலாக, அது உங்கள் நுரையீரல் அல்லது மூக்குக்குள் சென்று உங்களுக்கு சிக்கலை ஏற்படுத்துகிறது.சுவாசக் குழாய்க்கும் உணவுக் குழாய்க்கும் இப்படி நேரடித் தொடர்பு இருப்பதால் தான் நாம் சாப்பிடும் போது பேசக்கூடாது என்று சொல்கிறார்கள்.

எனவே, தயவுசெய்து நீங்கள் சாப்பிடும்போது பேச வேண்டாம். சாப்பிடும்போது பேசும் அனைவருக்கும் ஏற்கனவே பல நோய்கள் இருக்கும். இல்லையென்றால், அவர்களுக்கு விரைவில் பல நோய்கள் வருவதற்கான சாத்தியம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.






