முந்நூறு டன் நிறையும் அறுபத்து நான்கு அடியும் கொண்ட விஷ்ணுவின் மகாவிஷ்வரூப சிலையும் கூடவே ஏழு தலை கொண்ட ஆதிசேஷனுடைய சிலையும் இந்தியாவின் தமிழ் நாட்டில் இருந்து கர்நாடக தேசத்திற்கு மெதுவாக சென்று கொண்டிருக்கின்றது தெரியுமா? இது தொடர்பான சுவாரசியமான தகவல்களை இங்கே பார்ப்போம்…. #LoardVishnu #Statue #TamilNadu #Bengluru
பெங்களூரில் உள்ள கோதண்டராமசாமி ஆலயத்தின் பிரதான அறங்காவலர் B.சதானந்த் என்பவருக்கு ஏற்பட்ட கனவு அல்லது ஆசை என்னவென்றால், பல தலைகள், கைகள், சங்கு, சக்கரம் மற்றும் ஆதனங்கள் கொண்ட பிரமாண்டமான ஒரு விஷ்ணுவின் சிலையை ஒரே கல்லில் அமைத்து ஆலயத்தில் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்பதாகும். கனவை நிறைவேற்ற வேண்டி பொருத்தமான பாறைக்கான தேடல் சட்டலைட் மூலம் தேடப்படத்தொடங்கியது.
தேடுதலின் விளைவாக , தமிழ் நாட்டின் திருவண்ணாமலையில் , வந்தவாசி அருகில் உள்ள ஓர் சிறிய ஊர் ஆகிய கோரக்கோட்டை, எனும் ஊரில் உள்ள ஓர் குன்று தெரிவாகியது. பாறைகளை வெட்டி தமிழ் நாட்டில் இருந்து பெங்களூருவுக்கு கொண்டு செல்வதற்கு மத்திய மற்றும் தமிழ் நாட்டு அரசின் அனுமதியும் பெறப்பட்டது. இதற்கான பிரயத்தனங்கள் 2014ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டன.
நவீன இயந்திரங்கள் மூலம் வெட்டப்பட்ட சார்னொகைட் வகையை சார்ந்த பாறைகள் நவீன ரக ட்ரயிலர்கள் மூலம் கொண்டு செல்ல செய்யப்பட்ட முயற்சிகள் டயர்கள் பாரந்தாங்காது வெடித்ததால் பின்னடைவை சந்தித்தது.
இதன் காரணமாக, பாரத்தைக் குறைப்பதற்காக சிலையை அங்கேயே பாதி வடிமைப்பதற்குரிய முயற்சிகள் இரண்டு மூன்று வருடங்களாக மேற்கொள்ளப்பட்டன. சிலை வேலைப்பாடுகள் திருப்பதி தேவஸ்தானத்தைச் சேர்ந்த ஸ்தபதிகள் குழுவிடம் கையளிக்கப்பட்டிருக்கிறது.

இதனால் விஷ்ணுவின் ஒரு தலை, சங்கு, சக்கரம் உட்பட இரண்டு கைகள் செதுக்கப்பட்ட நிலையில் இறைவன் பாறையாகவும், ஆதிசேஷனுக்குரிய பாறை எதுவித வேலைப்பாடுகளும் இல்லாத பாறையாகவும், முறையே 160 மற்றும் 90 டயர்கள் கொண்ட டிரயிலர்களில் ஏற்றப்பட்டு, முன்னும் பின்னும் இயந்திரங்கள் பூட்டப்பட்ட இரு வாகனங்களாக பல்வேறு இடையூறுகளை சந்தித்தபடி அங்குலம் அங்குலமாக நகர்த்தப்பட்டன. எனினும் தற்போது விஷ்ணுவின் சிலையை மட்டுமே கொண்டு செல்வதாக அங்கிருந்து வெளிவரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
குவாரியில் இருந்து வாகனங்களை நகர்த்தவே மூன்று நாட்களாகியுள்ளது. மும்பையைச் சேர்ந்த ரேஷாம்சிங் குழுமத்தின் முப்பது பேர் கொண்ட குழு இந்தப் பணியை மேற்கொள்கிறது.
அங்கங்கே டயர்கள் மாற்றப்பட்டும் பாதைகள் செப்பனிடப்பட்டும் வாகனங்கள் நகர வழி செய்யப்பட்டுள்ளது.
அகலம் குறைவான சாலைகள் ஊடாக செல்லும் போது பொதுச் சொத்துக்கள் சேதமும் அடைந்துள்ளன. இவை எல்லாவற்றையும் சரி செய்ய பெங்களூர் கோதண்டராமசாமி ஆலய நிர்வாகம் பொறுப்பேற்றுள்ளது.
சிலை நகர்வுப் பணியை ஒருங்கிணைப்பதற்காக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கே. எஸ். கந்தசாமி அரசால் நியமிக்கப்பட்டுள்ளார்.
அங்கங்கே, சாலைகளில் செல்வதற்காக தொல்பொருளியல் துறையின் அனுமதியும் பெறப்பட்டுள்ளது. இதற்காக பாறையின் அகலமும் குறைக்கப்பட்டுள்ளது.
அனுமதிகளுக்காக அங்கங்கே காத்திருந்தும் பாறை நடத்தப்படுகிறது. மேலும் புதிய பாதைகள் இதற்கென ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஐம்பது நாட்களில் சிலையைக் கொண்டு சென்று விட முடியும் என்று கணிக்கப்பட்டிருந்தாலும் அது சாத்தியமா என்பது தெரியவில்லை.

சிலை செல்லும் பாதையெல்லாம் பிரதிஷ்டைக்கு முன்னரே மக்கள் தங்கள் பக்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். ராம நாம ஜெபங்களும், பூஜைகளுமாக களைகட்டியிருக்கும் அதே வேளை, தண்ணீர் தராதவனுக்கு விலை போனதாக சிலர் அங்கலாய்க்கின்றனர். சில பொது நல வழக்குகளையும் சந்தித்துக் கொண்டே ஆலய நிர்வாகத்தினர் பணியை முன்னெடுக்கின்றனர்.
சிலர் ஸ்ரீரங்கம் அமைந்தது போல் எங்கோ ஓர் இடத்தில் சிலை இறங்கப் போகிறது அங்கேயே ஆலயமும் அமையப் போகிறது என்று தத்தம் கருத்துக்களை பதிவிடுகின்றனர். ஏன் சிலையை முழுமையாக செதுக்கிய பின்னர் கொண்டு செல்ல முடியாது என்றும் ஓர் வினா எழுகிறது.
எது எப்படியோ, புனைகதைகளிலும் வரலாறுகளிலும் பல்லாயிரம் யானைகள் கொண்டெல்லாம் நகர்த்தப்பட்டதாகக் கூறப்படும் சிலைகளை கேள்வியுற்று வியந்திருந்தோமல்லவா? இப்போது பிரம்மாண்ட தெய்வசிலை ஒன்றின் நகர்வுக்கு சாட்சியாக உலக மக்கள் நாமே இருக்கப்போகிறோம்.
தமிழ் நாட்டிற்காக, கடவுள் கர்நாடகாவுக்குப் பயணித்து சென்று தண்ணீர் அனுப்பப் போகின்றாரோ என்னவோ? நம்பிக்கை கொண்டவர்களுக்கு இதுவொரு, தெய்வத் திருவிளையாடலாகவும் தோன்றலாமல்லவா?
கோரக்கோட்டை என்ற சிறிய கிராமத்துக்கு ஏற்பட்டுள்ள பிரபலம், அங்குள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை இப்போதே மாற்றம் செய்யத் தொடங்கியுள்ளது. மக்கள் கூட்டமும் வியாபாரங்களும் களைகட்டியிருக்கின்றன.
2019 இப்புதிய வருடத்தில் தை மாதம் நான்காம் திகதி அவலூர்பேட்டை வந்த கடவுள் பாறை தற்போது திருவண்ணாமலை பஸ் நிலையம் அருகில் இருப்பதாக தெரிகிறது.
இது பற்றிய அண்மைக்கால இணைப்புக்களை கீழே காணூங்கள்.
இணைப்புக்கள்:
விஷ்ணுவின் உருவம் கொண்ட பாறையின் தோற்றம்
அவலூர்பேட்டை அருகில் சிலை நகர்வு 2019 ம் ஆண்டு தை மாதம் 4ந்திகதி





