அபார்ட்மென்ட் வாங்கப்போறீங்களா?

அபார்ட்மென்ட் வாங்கப்போறீங்களா… சட்டமுறைகளோடு …ஹெல்த்தையும் கொஞ்சம் கவனிங்க Boss…

இன்று பலருக்கும் உள்ள ஆசை, நகர்ப்புறத்தில் ஒரு வீடு வாங்குவது என்பது தான். பலருக்கும் உள்ள இந்த ஒரு கனவு தான், இன்று அபார்ட்மென்ட்கள்#Apartments அதாவது தொடர்மாடிக் குடியிருப்புகளின் வளர்ச்சிக்கு ஒரு காரணம். இந்த வளர்ச்சி இன்று இன்னும் அதிகரித்து மேல் நாடுகளைப் போல #high rise life மிக உயரத்திலான குடியிருப்புகள் வரை வளர்ந்து வருகின்றது. இதில் வெளிநாட்டு முதலீடுகளும் பங்கு வகிக்கின்றன. நடுத்தரம் முதல் மிக உயர்ந்த தரத்திலான சொகுசு வீடுகள் வரை எந்த வீடுகளானாலும், குடியிருப்புத் தொகுதிகள் அல்லது மாடிவீட்டுத் திட்டங்களில் வாங்குவதானால் எமது ஆரோக்கியம் தொடர்பான சில விடயங்களையும் கருத்திற் கொண்டே வாங்க வேண்டும்.

வீட்டிற்கும் ஆரோக்கியத்திற்கும் என்ன தொடர்பு, அது தான் எல்லோரும் வாங்குகிறார்களே என்று ஒரு ஆடம்பரம் கருதி மட்டும் அபார்ட்மென்ட் ஐத் தெரிவு செய்யாதீர்கள்.

மற்றவர்களோடு ஒப்பீடு செய்யும் எமது குணம், எங்களுக்கு பொருத்தமில்லாத ஒன்றை கொள்வனவு செய்யும் அளவிற்கும் நம்மைக் கொண்டு செல்கிறது.

கொழும்பு நகரில், சராசரி அபார்ட்மென்ட் (2/3அறைகள்) வாங்குகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்; புதியதாக இருப்பின் குறைந்தது 150 முதல் 170 லட்சம் ஆவது ஆகும். இது ஒப்பீட்டளவில் மிகப்பெரிய முதலீடு தான். கொஞ்சம் கொஞ்சமாக பணம் கொடுத்து கொள்வனவு செய்யும் திட்டங்களாக இருந்தாலும், அது ஒரு தீர்வு மட்டுமே. நீங்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்திய பின்னர் இரண்டு அல்லது மூன்று மாத தவணைகளில் லட்சங்களாக செலுத்தப்போகிறீர்கள் அவ்வளவே, ஆக, ஒரு பெரிய முதலீடு, அதோடு நீங்கள் வாழப்போகும் வீடென்றால், உங்கள் ஆரோக்கியம் தொடர்பாக கவனம் செலுத்த வேண்டுமல்லவா?

முதலீடு தொடர்பான விடயங்களை இன்னொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம். மாடி வீட்டுக்கொள்வனவின் போது புதியதோ , பழையதோ, இனிமேல் கட்டப்பட இருப்பதோ, எதுவாயினும் ஆரோக்கியம் தொடர்பாக என்னென்ன விடயங்களை கருத்தில் கொள்ள வேண்டும் என்று பார்ப்போம்.

1. அமைவிடம் உங்கள் குடும்பத்தில் உள்ள பாதிக்கப்படக் கூடிய நபர்கள்(susceptible people) உதாரணமாக குழந்தைகள், பெண்கள்,
கட்டிளமைப்பருவத்தினர், வயதானவர்கள், கடினமாக உழைக்கும் ஆண்கள் மற்றும் நோய்த் தாக்கங்கள் கொண்டவர்களுக்கு ஏற்றதாக இருத்தல்
வேண்டும். அவர்கள் இலகுவாக சென்று வருவதற்குரிய சூழல் இருப்பது அவசியம்.

2. மனதிற்கினிய சூழல் மற்றும் அயலவர்கள்; அவர்களோடு இசைந்து வாழக்கூடிய இயல்பு.

3. காற்றோட்டம் மற்றும் சூரிய வெளிச்சம்

  • மிக முக்கியமாக அடுப்படி மற்றும் கழிப்பறைகளுக்கான காற்றோட்டம் மற்றும் சூரிய வெளிச்சம். வீடு முழுவதும் காற்றோட்டம் மற்றும் சூரிய வெளிச்சம் அவசியம். ஆனாலும் சிலர் கழிப்பறை தானே என்று தவிர்த்து விடுவதுமுண்டு.
  • அறைகளுக்கான காற்றோட்டம் மற்றும் சூரிய வெளிச்சம்
  • வரவேற்பறைக்கான காற்றோட்டம் மற்றும் சூரிய வெளிச்சம் ( சாப்பாட்டறை dining, அடுப்படி, வரவேற்பறை மூன்றும் இணைந்ததாக இன்று டிசைன் பண்ணுகிறார்கள்)

apartment-facilities-rentals

எமது நாட்டின் வளங்களில் போதுமான சூரிய வெளிச்சமும் சுத்தமான காற்றும் அளப்பெரியது. நாம் எதற்காகவும் அதை விட்டுத்தர வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் இவையெல்லாம் கிடைக்கும் வகையில் இன்று மாடி வீடுகளை டிசைன் பண்ண முடியும்.

4. இடவசதி
குடும்பத்தில் உள்ளவர்களுக்கேற்ப அவர்களின் தேவைக்கேற்ப இடவசதி மிக முக்கியமாகும். இடவசதியை சதுர அடியில் சொல்லுவார்கள். இதை மட்டும் வைத்து இடவசதி பொருத்தமானதா என்பதை தீர்மானிக்க முடியாது. உதாரணமாக 1000 சதுர அடியில் 2 அறைகள் கொண்ட வீட்டையோ 3 அறைகள் கொண்ட வீட்டையோ அமைக்க முடியும். அறைகளின் அளவைப் பொறுத்தே மற்ற வசதிகள் அதாவது கழிப்பறைகள், வரவேற்பறைகள், அடுப்படிகள், வேலையாள் அறை போன்றவையின் அளவுகள் அமையும்.

எல்லா பகுதிகளுமே போதுமான இடவசதியைக் கொண்டிருக்க வேண்டும். இடவசதிக்கும் மனரீதியான உணர்வுகளுக்கும் தொடர்பு உண்டு. மன ரீதியான உணர்வுகள் நாம் வாழ்க்கையில் எடுக்கும் தீர்மானங்களில் செல்வாக்குச் செலுத்துகின்றன. மேலும் சுவாசம் மற்றும் தோல் தொடர்பான நோய்களையும் தவிர்க்க வேண்டுமென்றால் போதுமான இடவசதியோடு காற்றோட்டம் மற்றும் வெளிச்சமும் அவசியம் ஆகும். பகலில் மின்விளக்குகளுடன் சீவியம் என்பது எமது நாட்டைப் பொறுத்தவரை தேவையற்றது. ஆரோக்கியம் அற்றதும் கூட.

இலாபம் மட்டும் நோக்கமாகக் கொண்டவர்கள் இதையெல்லாம் கருத்தில் கொள்வதில்லை. ஒரு மாடித் தொகுதிக்கும் அடுத்த மாடித் தொகுதிக்கும் இடையில் போதுமான இடைவெளி இருப்பதில்லை. இதுவே, போதுமான இடவசதி மற்றும் காற்றோட்டம் மற்றும் சூரிய வெளிச்சம் போன்றவை இல்லாததற்கு காரணம் ஆகும். இதற்கான சட்ட திட்டங்களும் அவ்வளவு பொருத்தமானதாக இல்லை என்பதே எனது கருத்து. ஒரு சிறு இடம் கிடைத்தவுடன் அதில் எத்தனை வீடுகள் அமைத்து இலாபம் பார்க்க முடியும் என்று சிந்திப்பவர்கள் உண்டு.

இவையெல்லாம் பார்த்து எல்லாம் சரியாக இருக்கிறது என்று ஒரு அபார்ட்மென்ட் வாங்கியாயிற்று என்று வைத்துக்கொள்வோம். இப்போது அடுத்த காணியில் ஒரு மாடித்திட்டம், தொகுதிகளுக்கிடையில் போதுமான இடைவெளி இல்லாமல் உருவாகி வருகிறது என்றால், முதலில் சரியாக வாங்கிய உங்களுக்கும் இடைஞ்சல் வரக்கூடும். இதற்கெல்லாம் காரணம், சிந்திக்காது மக்களிடையே எழும் கிராக்கி demand அல்லது கேள்வியே காரணம்.

5. பொருத்தமான கழிவுநீர் வடிகாலமைப்பு. இதற்கான அனுமதி வீட்டுத்தொகுதி அமைக்கப்படும் போது பெறப்பட்டிருக்கும்.

6. பொருத்தமான storm water drainage system(மேலதிக நீர், தேங்கி நிற்கக் கூடிய நீர், மழை மற்றும் புயல் காரணமான நீர் செல்லும் வடிகாலமைப்பு). இதற்கான அனுமதியும் பெறப்பட்டிருக்கும்.

6. பொருத்தமான குடிநீர் வழங்கலமைப்பு. இதற்கான அனுமதியும் பெறப்பட்டிருக்கும்.

7. பொருத்தமான காஸ் மற்றும் மின் படைப்புக்கள்

8. தீயணைப்பு வசதிகள்

9. போதுமான மின்தூக்கி lift வசதிகள்

உதாரணமாக 20 வீடுகள் கொண்ட மாடி வீட்டுத்தொகுதிக்கு 10 பேர் செல்லக்கூடிய மின்தூக்கி ஒன்று போதுமென்று வைத்துக் கொள்வோம். அப்படி என்றால் அதைவிட அதிகமாக உள்ள தொகுதிகளுக்கு ஒரு மின் தூக்கி போதுமானதல்ல என்பது தெளிவாகப் புரியும்.

10. அவசர ரீதியாக படிக்கட்டுகளைப் பயன்படுத்த வேண்டி ஏற்படலாம். ஆகவே படிக்கட்டுகளும் போதுமான விசாலம் உடையதாக அமைய வேண்டும். ஒருவர் பின் ஒருவராக இறங்க வேண்டிய படிக்கட்டுகள் பயன் குறைந்தவையாகவே தெரிகிறது. மின்தூக்கிகளைப் போன்றே படிக்கட்டுகளும்stairs ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் தேவைப்படலாம்.

11. ஜெனரேட்டர் வசதிகள். கூடுகளாக வீடுகள் அமையும் போது மின்சாரத்தில் தங்கியிருக்க வேண்டி ஏற்படுவது வழமையே. அதனால், தேவைகருதி செயல்படுத்தக் கூடிய ஜெனரேட்டர் generator வசதிகள் இருப்பதும் அவசியம் ஆகும்.

12. வாகனங்கள் தரிப்பிடம். பல மாடித் தொகுதிகளில் சில தட்டுக்களில் உள்ள வீடுகளுக்கு தனிப்பட்ட வசதிகள் இல்லை என்பார்கள். இதற்கும் ஆரோக்கியத்திற்கும் தொடர்பு குறைவாக இருப்பினும், இதையும் கருத்தில் கொள்ள வேண்டும். எமக்கு தேவை இல்லை என்றால் சரி, ஆனால் பின்னாளில் தேவைப்படலாம் என்றாலோ இதையும் கருத்தில் கொள்ளவேண்டும்.

13. கட்டிக்கொண்டிருக்கும் தொகுதிகள் அல்லது இனிமேல் கட்ட இருக்கின்ற திட்டங்கள் என்றால், அவர்கள் தருகின்ற unit plan(அளவுகளோடு) மற்றும் floor plan(படிக்கட்டுகள், மின்தூக்கிகள், பல்கனிகள், இடைவெளிகள், நடைக்கூடம்-corridors, தாழ்வாரங்கள் உட்பட) இரண்டையும் பயன்படுத்தி ஊகிக்க முடியும்.

13. எல்லாம் சரி என்றால், சட்ட ரீதியான விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.

முக்கியமாக கட்டிக் கொண்டிருக்கும் தொகுதி என்றால் அதற்குரிய ஆவணங்கள் பெறப்பட்டுள்ளதா என்பதை உங்கள் வழக்கறிஞருடன் இணைந்து
அலசிப் பார்க்க வேண்டும். அதோடு, கட்டிட அல்லது சொத்து அபிவிருத்தியாளரின் நம்பகத்தன்மையை முன்கூட்டியே அறிந்து வைத்திருத்தல்
வேண்டும்.

14. சட்ட ரீதியான முதலீட்டுத் தீர்வுகள்

எப்படி தவணை முறைக் கொள்வனவு பொருட்களுக்கு இருக்கின்றதோ அது போலவே சொத்துக்களுக்கும் உள்ளது. இது பற்றி விற்பனையாளர்களின்
கருத்துக்களை உங்கள் வழக்கறிஞருடன் போதுமான விடயங்களை கதைத்து சட்ட ரீதியாகவும் எழுத்து பூர்வமான ஆவணங்களைப் பெற்றுக்
கொள்வதன் மூலமாகவும் அணுக வேண்டும்.

கடன் வசதிகள் வேண்டும் என்றால் உங்கள் வங்கியோடு தொடர்பு கொள்வதோடு மீளச்செலுத்தும் உங்கள் இயலுமையையும் ஒப்பிட வேண்டும். இந்த விடயத்திலும் உங்கள் வழக்கறிஞரின் உதவியைப் பெற்றுக்கொள்ள முடியும்.

சொத்து முதலீடு என்பது உங்களுக்கு இலாபம் தருவதாக இருக்க வேண்டும். அதாவது எப்படி விற்பனையாளர் இலாபம் அடைகிறாரோ அதே போல் கொள்வனவினால் நாம் பயனடைய வேண்டும். எனவே, கட்டிக்கொண்டிருக்கும் அல்லது இனிமேல் கட்ட இருக்கும் திட்டங்களாக இருந்தால் திட்டம் எப்போது தொடங்கும்/தொடங்கப்பட்டது மற்றும் எப்போது நிறைவடையும் போன்ற விடயங்களில் சட்ட ரீதியான ஒப்புதலுக்கு வர வேண்டும். முழுமையாக நிறைவடையாத திட்டங்களும் வரலாற்றில் உண்டு. எனவே, கால தாமதம் ஆகும் போது, உங்களுக்கு கிடைக்கும் தீர்வுகள் என்னவென்பதை சட்டரீதியாக அணுக வேண்டும். கால தாமதங்கள் சில வேளைகளில் வருடக்கணக்கில் செல்லலாம். நீங்கள் நுகர்வோர் மற்றும் முதலீட்டாளர் ஆவீர்கள். கால மதிப்பீடு time value உங்கள் பணத்திற்கு உண்டு.

looking luxury apartment house in city

Add Comment