மருத்துவர்கள் பிரச்சினைகளில் சிக்குவது ஒன்றும் புதிதில்லை. ஆனால் இங்கிலாந்தைச் சேர்ந்த 53 வயது மருத்துவ நிபுணர் சிமோன் பிரம்ஹால், வித்தியாசமான, இதுவரை கேள்விப்படாத குற்றச்சாட்டில் மாட்டியிருக்கிறார். நோயாளிகள் தங்கள் உயிரையே மருத்துவர்களை நம்பித்தான் ஒப்படைக்கிறார்கள். அப்படிப்பட்ட உயர்ந்த தொழிலுக்கு மருத்துவர்களும் மரியாதை அளித்து, அர்ப்பணிப்போடு வேலை செய்துவருகிறார்கள்.
பேர்மிங்ஹாமில் உள்ள ராணி எலிசபெத் மருத்துவமனையில், சிமோன் பிரம்ஹால் 2013ஆம் ஆண்டு ஓர் ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டார். 12 வருட அனுபவம் என்பதால் இரண்டு அறுவை சிகிச்சைகளும் வெற்றிகரமாக நடந்துமுடிந்தன. சிமோனைப் பாராட்டி பத்திரிகைகளில் செய்திகளும் வெளிவந்தன. அந்த அறுவை சிகிச்சைகளில்தான் இப்போது குற்றவாளியாக, தண்டனையை எதிர்நோக்கியிருக்கிறார்.
இவர் அறுவை சிகிச்சை செய்தவர்களில் ஒருவருக்குச் சிறிது காலத்துக்குப் பிறகு மீண்டும் ஏதோ பிரச்சினை. அதனால் மறுபடியும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனால்,இந்த முறை வேறு மருத்துவர்கள் அந்தப் பணியை மேற்கொண்டனர். அப்போது கல்லீரலில் ‘எஸ்பி’ என்று சிமோன் பிரம்ஹால் பெயரின் முதல் இரண்டு எழுத்துகள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். சாதாரணமாக அறுவை சிகிச்சை செய்யும்போது ஏற்படும் வடுக்கள் கூட வெகு விரைவில் மறைந்துவிடும். ஆனால்,இவரது எழுத்துகள் அப்படியே இருந்தது கண்டு ஆச்சரியமடைந்தனர். சிமோன் மீது குற்ற வழக்கு தொடுக்கப்பட்டது.
”நோயாளிகள் கடவுளுக்கு நிகராக மருத்துவர்களை நினைக்கிறார்கள். அவர்களின் நோய்க்குதான் நாங்கள் மருத்துவம் செய்ய வேண்டும். அவர்களின் அனுமதி இல்லாமல், எங்களின் விருப்பத்தை நோயாளிகளின் உடலில் நிறைவேற்ற யாருக்கும் உரிமை இல்லை. சிமோனின் இந்தச் செயலால் நோயாளி உடல் நிச்சயம் வலியை உணர்ந்திருக்கும். ஒருவேளை மயக்கத்தில் வலி தெரியாவிட்டாலும்கூட இது குற்றம்தான். அனுபவம் மிக்க மருத்துவர் இப்படிச் செய்ததை எங்களால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. நெறிமுறைகளின்படி அவர் செய்தது தவறில்லை என்றாலும் மருத்துவச் சட்டப்படி அது தவறுதான்” என்கிறார்கள் சக மருத்துவர்கள்.

“நான் எத்தனையோ அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டிருக்கிறேன். அன்று ஏனோ இப்படிச் செய்துவிட்டேன். இது ஒரு தவறான விஷயமாகவே தெரியவில்லை. அந்த நோயாளிக்குப் பிரச்சினை ஏற்பட்டிருக்காவிட்டால் இதுவரைகூட யாருக்கும் தெரிந்திருக்காது. நான் செய்ததை ஒப்புக்கொண்டுவிட்டேன். ஆனால்,இது ஒரு அறுவை சிகிச்சை மருத்துவரைத் தண்டிக்கும் அளவுக்குப் பெரிய குற்றமா என்று யோசிக்க வேண்டும்” என்கிறார் சிமோன் பிரம்ஹால்.
தற்போது நிபந்தனையற்ற பிணையில் வெளியில் இருக்கும் சிமோன், அடுத்த மாதம் கிடைக்கப் போகும் தீர்ப்புக்காகக் காத்திருக்கிறார்!






