முளைக்கீரை சாதாரணமாக இந்தியாவிலும் இலங்கையிலும் இதன் சுவைக்காகவம், மருத்துவச் சிறப்புக்காகவும் பயிரிடப்படுகிறது. மிதமண்டல மற்றும் வெப்ப மண்டல நாடுகளில் இக்கீரை நன்றாக வளர்கிறது. உழுது பயிரிடடப்பட்ட நிலங்களிலும், தரிசு நிலங்களிலும் இக்கீரை சிறப்பாக வளரும் ஆற்றல் பெற்றது.
முளைக்கீரைக்கு இளங்கீரை என்ற மற்ற பெயரும் உண்டு. முளைக்கீரை உணவுச் சத்துக்கள் மிகுந்த ஒரு கீரையாகும்.
இக்கீரையை சமையல் செய்துண்ண நாவுக்கு உருசியைத்தரும். முளைக் கீரையை மற்றப் பருப்பு வகைகளுடன் சேர்த்துக் கூட்டாகவும், மசியலாகவும் செய்துண்ணலாம். முளைக்கீரையில் நீரும், புரதச்சத்தும், கொழுப்புச் சத்தும், தாதுப்புக்களும், நார்ச் சத்தும், மாச்சத்தும் நிறைந்துள்ளன.
முளைக் கீரையானது சிறந்த மருத்துவக் குணங்களைப் பெற்றிருக்கிறது. இதை சமையல் செய்துண்ண நாவுக்கு உருசியைக் கொடுப்பதோடு நல்ல பசியையும் கொடுக்கக் கூடியது இக்கீரையை நன்கு ஆய்ந்து அலம்பிச் சுத்தப்படுத்தி பாத்திரத்திலிட்டு சிறிது அரிந்த வெங்காயத்துடன் பச்சை மிளகாயைக் கூட்டி உப்பிட்டுக் கடைந்து உட்கொண்டால் உட் சூடு, இரத்தக் கொதிப்பு, பித்த எரிச்சல் முதலிய நோய்கள் குணமாகும்.
அத்துடன் கண் குளிர்ச்சியைப் பெறும். சொறி சிரங்கு முதலிய நோய்கள் இக்கீரையை உண்பதினால் குணமடையும். இந்தக் கீரையானது வெப்பசுரத்தை தணிக்க வல்லது.






