ஷோன் மார்ஷ் தென்னாபிரிக்க தொடரில் இல்லை

தென்னாபிரிக்காவிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள அவுஸ்திரேலியக் குழுவில் அவ்வணியின் துடுப்பாட்ட வீரர் ஷோன் மார்ஷ் பங்குபற்றமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு ஏற்பட்டுள்ள உபாதை காரணமாகவே இந்நிலை ஏற்பட்டுள்ளது. தென்னாபிரிக்காவிற்கான டெஸ்ற் குழாமில் ஷோன் மார்ஷ் இடம்பெற்றிருந்த போதிலும் இங்கிலாந்திற்கு எதிரான 5ஆவது ஒருநாள் சர்வதேச போட்டியின்போது அவர் உபாதைக்குள்ளாகியிருந்தார்.

உபாதையின் பின்னர் அவர் பங்குபற்றுவாரா, இல்லையா என்ற சந்தேகம் நிலவிய போதிலும் தற்போது அவர் பங்குபற்றமாட்டார் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எதிர்பார்த்தளவு அவரது கால் உபாதை குணமாகியிருக்கவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஷோன் மார்ஷிற்குப் பதிலாக மற்றொரு இடது கைத் துடுப்பாட்ட வீரரான பிலிப் ஹியூஸ் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். அவுஸ்ரேலிய டெஸ்ற் குழாமிலிருந்த வீரர்கள் ஏற்கனவே தென்னாபிரிக்காவிற்கு புறப்பட்டுச் சென்றுள்ள நிலையில், பிலிப் ஹியூஸ் அவர்களோடு விரைவில் இணைந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்திருந்த மற்றொரு வீரரான ஜக்சன் பேர்ட் உடற்தகுதியை நிரூபித்துள்ளடன் காரணமாக தென்னாபிரிக்காவிற்குப் பயணமாகவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தென்னாபிரிக்க மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான டெஸ்ற் தொடர் பெப்ரவரி 12ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Add Comment