😏 பகுதி 4 – கவர்ச்சியும் ஆடைகளும்
ஆடைகளின் இன்னொரு மிகப்பெரிய பங்கு நம்மை அழகாக்குவது. எமது தோற்றத்தை மிளிரச் செய்யக்கூடியதாக நல்ல வடிவமைப்பு கொண்ட, நிறங்கள் கொண்ட ஆடைகளை தெரிவு செய்து அணிந்து கொள்ளலாம். கவர்ச்சி என்ற பதம் ஓர் தவறான வார்த்தையாகிவிட்டது இன்று; மேலும் இதற்கு சினிமா மற்றும் இதர ஊடகங்களின் பங்கு மிகப்பெரியது. எல்லோர்க்கும் புரியும் வகையில் சொல்ல வேண்டுமென்றால் இந்தப் போக்கிலேயே எழுதுவது தான் உசிதமானது.

நாம் அணியும் ஆடைகள், இதர அணிகலன்கள் (accessories), கூந்தல் அலங்காரம்,இவற்றால் அமையும் எமது தோற்றம்- இவற்றுக்கு நாம் பழகும் சமூகத்திடம் இருந்தே ஓர் அங்கீகாரத்தை எதிர்பார்ப்பது அல்லது நம்மை உயர்த்திக் காட்டும் ஓர் தோற்றப்பாட்டை impression ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் வயது வித்தியாசம் இன்றி எல்லோருக்கும் இருப்பது உண்மையே.
இதைவிடவும் எதிர்ப்பாலினத்தினரிடையே ஓர் மதிப்பையோ அங்கீகாரத்தையோ பெற்றுவிடவேண்டும் என்ற எண்ணமும் இளைஞர் யுவதிகளுக்கு எழுவதும் வழமையே. இந்த எண்ணங்களை ஒருவகையில் கவர்ச்சி நோக்கமாகக் கொள்ளலாம். இது மிகவும் வெளிப்படையான ஒரு விடயம் ஆகும். ஆனால், இந்த எண்ணப்பாடு ஆரோக்கியமானதாக இருக்கும் வரையில் பொருத்தமானதே.
சில வேளைகளில் இவை கொஞ்சம் மிதமான போக்கை ஏற்படுத்தவும் செய்கின்றன. அப்போது இந்தக் கவர்ச்சி என்ற பதம் அவை சினிமாக்களில் சொல்லப்படுவது போல அர்த்தத்தை , உடல் வெளிக்காட்டுதலை ஏற்றுக் கொள்கிறது. உடனே பெண்களுக்கு தான் இது பொருந்தும் என்று முடிவெடுத்து விடாதீர்கள்.இன்றைய காலத்தைப் பொறுத்த வரையில் இது ஆண்களுக்கும் பொருந்தும்.
சரி, உதாரணமாக, சில ஆடைகளை பார்த்தோமானால் ஒளி புகும் transparent துணிகளில் தைக்கப்பட்டிருக்கும்; இதில் சரி பிழை கூறுவதை விட நாம் முன்னைய பகுதிகளில் ஆராய்ந்தது போல எமக்கு எதைத் தெரிவு செய்து அணிய வேண்டும் என்று யாரும் எமக்குக் கற்றுத் தர வேண்டியதில்லை எமக்குப் புரிந்திருக்கும். அவற்றை அணிவதாக இருந்தால் அணியும் முறைகளில் அணிந்து கொள்ளவேண்டும்.

வேறு சில ஆடைகள் உடலைப் பிரித்து எடுக்க வேண்டிய வகையில் தைக்கப்பட்டிருக்கும்; சில ட்ரெஸ்ஸஸ், டீ ஷேர்ட்ஸ், ஜீன்ஸ் இப்படி அமைவதைக் காணலாம். இவையெல்லாம் எமக்கு பொருத்தமானவையா என்பதை நாம் தான் தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.

சில ஆடைகளில் கிழியல்கள் நாகரிகப் போர்வையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். வாஸ்து பார்த்துவீட்டைக் கட்ட வேண்டும் என்ற எண்ணம் பரவுகிறது ஆனால் ஆடைகளில் கிழியல்கள் – எங்கேயோ லொஜிக் இடிப்பது போல் இல்லை? நகைச்சுவைக்கப்பால் நாம் எதை அணிய வேண்டும் என்பது நமது சுதந்திரமே, அதை சரியாகக் கையாளத் தெரிந்திருப்பது நல்லது.
நாம் எந்தக் கோர்பரேட் வேலை செய்தாலும், கோர்பரேட் விழாக்களுக்கு சென்று வந்தாலும், எவ்வளவு தான் எமது வாழ்க்கைப்படி உயர்ந்து வளர்ந்தாலும், நாம் வாழும் சமூகம் வேறு, கலாசாரமும் வேறு தான்.
இந்த ஆடைகளை முன்னைய காலத்தில் யாருமே அணியவில்லையா என்று கேள்வி வருகிறது. பதில் அணிந்திருக்கிறார்கள் என்பதே. நாம் எமது பிள்ளைகளுக்கு விட்டுச்செல்வது நவீன சிந்தனைகளேயன்றி நவீன ஆடைகள் அல்ல.

அதற்காக அந்தந்த நாகரிகங்களைப் பின்பற்ற வேண்டாம் என்று சொல்லவில்லை.மாற்றங்கள் சிந்தனைகளோடு சேர்ந்து வளர்கையில் அது நல்லதே; ஆனால் அதற்குரிய எமது தெரிவுகள் தான் சிறந்தவையாக இருக்க வேண்டும்.
மேலும், இன்றைய உலகமயமாக்கல், இன்றைய இணையமயமாக்கல் மற்றும் இன்றைய சமூக வலைத்தளப் பரவுகைகள் எமது ஆடை கலாசாரத்தை மேலைத்தேயத்தோர் பின்பற்றுவதும் அங்கங்கே அவதானிக்கத் தக்கதாகவே இருக்கின்றது என்பதை நாம் இங்கே குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.
நன்றி
பகுதி 3 – மேலைத்தேய நாகரிகத்தின் செல்வாக்கு






