மயங்கி விழுந்த டொக்டர்

ஒரு ஆள் டொக்டரைத் தேடி வந்தான். அவனை உட்கார வைத்து டொக்டர் விசாரித்தார்.
‘சொல்லுப்பா.. உடம்புக்கு என்ன?’
“எனக்கு வயிறு வலிக்குது டொக்டர்”
‘நான் மனநோய் மருத்துவர். வயிறு வலிக்கு நீ பார்க்க வேண்டிய டொக்டர் அடுத்த தெருவுல இருக்கார்.’
“அவர் அங்கயே இருக்கட்டும். எதனால எனக்கு வயிறு வலின்னு கேளுங்க டொக்டர்”
‘சரி எதனால வலி?’
“நான் ஒரு பூனைய முழுங்கிட்டேன்!”
‘ஓ…அப்படீன்னா நீ இங்க வர வேண்டிய ஆள் தான். உள்ள ரூம்ல வந்து படு’
உள்ளே அழைத்துச் சென்று, அவனுக்கு ஊசி போட்டு தூங்க வைத்தார். அவன் வழியிலேயே சென்று அவனை குணப்படுத்த எண்ணிய டொக்டர், உயிருள்ள ஒரு பூனையை கொண்டு வந்து அவன் தூங்கி எழுந்ததும் அவனருகில் சென்று…..
‘அப்பாடா! எல்லாம் நல்லபடியா முடிஞ்சது’
“நீங்க என்ன சொல்றீங்க டாக்டர்?”
‘நீ நிஜமாவே ஒரு பெரிய பூனையை முழுங்கியிருந்தே..அதை ஒப்பிரேஷன் செய்து வெளியே எடுத்துட்டோம். நல்ல வேளை, உடனடியா நீ என்கிட்ட வந்ததால பிழைச்சிக்கிட்ட… அந்த பூனையும் பிழைச்சிட்டுது’
“அப்படியா டொக்டர்…அந்த பூனையை நான் பார்க்கலாமா?”
‘ஓ..ம்…. இதோ பார்….’
அவன் மெல்ல எழுந்து, பூனையைப் பார்த்தான். எதுவும் பேசாமல் டொக்டர் பக்கம் திரும்பினான். டொக்டர் பெருமிதத்துடன் அவனைப் பார்த்தார்.
“பளார்!!”
எதிர்பாராமல் அவன் அறைந்ததால் நிலைகுலைந்த டொக்டர், ‘எதுக்குய்யா என்னை அடிச்சே…..’ என ஆவேசமாக கேட்டார்.
“நீங்க ஒரு போலி டொக்டர். நான் முழுங்குனது கறுப்பு பூனை. ஆனா நீங்க வெள்ளைப் பூனைய காட்டி ஏமாத்தப் பாக்குறீங்க!”
டொக்டர் மயங்கி விழுந்தார்.

Add Comment