பருக்கள் தொல்லையோ தொல்லை….

pimple

பருக்கள் வந்துவிட்டால் சொல்லவே வேண்டாம், எல்லோரும் படும்பாடு…….. #Pimple #HealtyLife #Stress

யாருக்கெல்லாம் பருக்கள் வருகின்றன….?

1. கட்டிளமைப்பருவத்தினர்
2. இளம் பெண்கள்
3. மன அழுத்தம், மனச்சோர்வு வேறு மனரீதியாக தாக்கத்தை எதிர்கொள்வோர்
4. உடற்பருமன் உடைய, மற்றும் உணவில் கொழுப்பு, சீனி, மாச்சத்துக்கள் அதிகமாக சேர்த்துக் கொள்பவர்கள்
5. Fatty Liver என்று சொல்லப்படும் கொழுப்பு சேர்ந்துள்ள ஈரல் பிரச்சினை உள்ளவர்கள்
6. Visceral Fat அதாவது உடல் உள் உறுப்புகளில் கொழுப்பு சேர்ந்திருக்கக் கூடியவர்கள்
6. உடலியக்கம் குறைந்தவர்கள்
7. தண்ணீர் குறைவாக அருந்துபவர்கள்
8. உணவில் இலை வகை, காய்கறி, கடலை வகைகள் அதிகமாக சேர்த்துக் கொள்ளாதவர்கள்
9. தற்சுகாதாரம் குறைந்தவர்கள் மற்றும் தலையில் பொடுகு அல்லது வேறு தொற்றுக்கள் உடையவர்கள்

 

ஆகவே, பருக்களுக்கும் எமது ஆரோக்கியத்திற்கும், சுத்தத்திற்கும், மன அமைதிக்கும் நிறைய தொடர்பு உள்ளது என்பதைப் புரிந்து கொண்டிருப்பீர்கள். மிக அதிகமாக பருக்கள் கொண்டவர்கள் என்ன செய்ய வேண்டும் ?

1. எண்ணெய், கொழுப்பு அதிகமாக உள்ள உணவுகளைக் குறைக்க வேண்டும்
2. உங்கள் எடை உங்கள் உயரத்திற்கு சரியாக இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ள வேண்டும்.( BMI)
3. ஏதாவது கிறீம்கள், சோப் போன்ற அழகுப் பொருட்கள் பயன்படுத்துபவர்களாய் இருந்தால் அதன் ஒத்துக்கொள்ளும் தன்மையை ஆராய்தல் வேண்டும் . தேவையேற்படின் அவற்றைப் பாவிப்பதை நிறுத்தலாம்.
4. தோல் வைத்தியரை( dermatologist) அணுகி உங்கள் நிலமையை சோதித்து அதற்குரிய மருந்துகளைப் சாப்பிட வேண்டும். அல்லது பூசுவதற்கு தந்தால் பூச வேண்டும். சில வேளைகளில் மருந்துகள் கொண்ட சவர்க்காரமும் பயன்படுத்த நேரலாம்.
5. சில வேளைகளில் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் வைத்தியரிடம் செல்ல வேண்டி ஏற்படலாம். வைத்தியரின் மருந்துச்சீட்டை பத்திரப்படுத்தி வைத்திருப்பதோடு, ஒவ்வொரு தடவை வைத்தியரிடம் செல்லும் போதும் அவற்றைக் காண்பிக்க வேண்டும்.
6. மருந்துகள் சாப்பிடும் காலப் பகுதியில் நிறைய தண்ணீர் அருந்த வேண்டும். வெயிலில் செல்வதைக் குறைக்க வேண்டும்.
7. மருந்துகள் சாப்பிடும் காலப் பகுதியில், உங்கள் எடை ஓரளவேனும் கட்டுக்குள் வரும் என்றால், மீண்டும் பருக்கள் வருவது குறையும்.
8. மேலும் உங்களுடைய உணவில் அதிகம் கொழுப்பு சேராமல் கீரை, காய்கறி வகைகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
9. பருக்கள் நன்றாகக் குறைந்து வைத்தியரும் மருந்துகளை நிறுத்தலாம் என்ற பின்னர் இயற்கையான பொருட்களை உதாரணமாக கடலை மா, பசும் பால் போன்ற பொருட்களை கலந்து முகத்தை சுத்தம் செய்து கொண்டு வர வேண்டும். அல்லது மென்மையான சோப்கள் பயன்படுத்தலாம்.
10. கொஞ்சம் வீரியம் கொண்ட இயற்கைப் பொருட்களான எலுமிச்சை, ஆரஞ்சு போன்றவற்றை மீண்டும் தோல் நன்றாக வரும் வரை தவிர்ப்பது நல்லது. (மருந்துகள் பூசுவதற்கு தந்திருந்தால், அவற்றை நிறுத்திய கையோடு எலுமிச்சை சாறு ,தோல், மஞ்சள் போன்றவையை பயன்படுத்தக்கூடாது.) இந்த சிகிச்சைகள் ஆறு மாதங்கள் ஏன் ஒரு வருடம் கூட எடுக்கும். இது ஒவ்வொருவரைப் பொறுத்தது.

இந்தக்காலப்பகுதியில் உங்கள் உணவு முறை மற்றும் எடை வாழ்க்கை முறையை சரியாக மாற்றிக் கொண்டால் மீண்டும் பருக்கள் வராது. அத்தோடு, தினமும் இரண்டு தடவையாவது மென்மையான சவர்க்காரம் பாவித்து முகம் கழுவதல், இரவு நித்திரைக்குச் செல்ல முன் முகம் கழுவுதல், தினமும் குளித்தல், வாரம் ஒரு முறை தலைக்குக்குளித்தல், பயன்படுத்தும் துவாய், தலையணை உறை, படுக்கை விரிப்பு, சீப்பு போன்றவற்றை வாரம் ஒருமுறை கழுவி அல்லது துவைத்து உலர வைத்துப் பயன்படுத்தல் என்பவையும் முக்கியமாகும்.

nutrition-diet

மிகக்குறைவாக பருக்கள் உடையவர்கள் அல்லது எப்போதாவது பருக்கள் ஏற்படுபவர்கள் என்ன செய்யலாம்?

1. நிறைய தண்ணீர் அருந்த வேண்டும்.
2. கீரை வகை, காய்கறி அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்
3. முக்கியமாக பருக்களைக் கிள்ளக் கூடாது
4. நன்றாக உடற்பயிற்சி செய்து, அல்லது நடைப்பயிற்சி செய்து இரத்த ஓட்டம் சீராக இருக்குமாறு வைத்துக் கொள்ள வேண்டும்.
5. இயற்கையான பொருட்களை அதாவது மஞ்சள், எலுமிச்சை சாறு, கடலை மா, பயற்றம் மா போன்றவற்றை பயன்படுத்தி வாரம் ஒருமுறை அல்லது
இருமுறை பக் போல போட்டு 20 நிமிடம் வரை உலர வைத்து பின் கழுவி விட வேண்டும்.இதனை இரவில் தூங்கப் போகும் முன் செய்யலாம்.
6. நீங்கள் டீன்ஏஜ் பருவத்தினராக இருந்தால்( இவர்களுக்கு பருக்கள் வருவது சாதாரணம்) உடற்பயிற்சியோடு மூளைக்கு வேலை கொடுக்கும் செஸ் (Chess) அல்லது வேறு விளையாட்டுக்களைபொழுது போக்காக வைத்துக்கொள்ள வேண்டும் ( கணனி விளையாட்டுக்கள் அல்ல ).
7. இது ஏதாவது மன அழுத்தத்தில் இருப்பவர்களும் உடற்பயிற்சி மற்றும் மூளைக்கு பயிற்சி தரக்கூடிய விளையாட்டுகளில் ஈடுபடுவதோடு சிறந்த உணவுகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

பருக்கள் வருகின்றது என்றால் ஒன்று உடம்பில் ஏதோ மாற்றம் ஏற்பட்டுள்ளது அல்லது ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம். வாழ்க்கைப்படிகளில் ஏற்படும் மாற்றங்கள் அதாவது பூப்படைதல், காதல், திருமணம், மாதவிடாய் மாற்றங்கள், கருவுறுதல், கருச்சிதைவு, விவாகரத்து போன்ற மனரீதியாக மாற்றம் ஏற்படக்கூடிய நிகழ்வுகள் கூட ஹோர்மோன்கள் காரணமாகவும், உணவுப் பழக்கம் காரணமாகவும் பருக்களை உண்டு பண்ணக்கூடும். வேலை ரீதியாக மன அழுத்தம் கொண்டுவரும் காரணிகளும் பருக்களை உண்டு பண்ணலாம்.

healthy_lifestyle_heart-

பருக்கள் வந்தால் அதற்கு க்றீம், அல்லது சோப் அல்லது வேறு ஏதாவது பொருள் அல்லது மருந்துகள் பயன்படுத்துவதோடு நின்று விடக்கூடாது. அப்படி நிறுத்திவிடுவது தற்காலிக மாற்றம் ஒன்றை மட்டுமே தரும். ஆகவே, பருக்கள் வந்தால் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

Add Comment