அப்பிள் நிறுவனத்தின் தயாரிப்பான ஐ-போனிலிருந்த மாதிரிகளை அப்படியே நகல் செய்ததாகக் கூறி சம்சுங் நிறுவனத்தின் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு கிட்டத்தட்ட ஏழு வருடங்களாக நடந்து வந்த நிலையில் தற்போது ஒரு முடிவுக்கு வந்துள்ளது.
அப்பிள் நிறுவனத்தின் மிக முக்கிய தயாரிப்பான ஐ-போனின் மாதிரிகளை சம்சுங் நகல் செய்ததாகக் கூறி , அப்பிள் நிறுவனம் நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தது. அமெரிக்காவில் தொடுக்கப்பட்ட இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சென்ற மாதம் தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பில், ‘சம்சுங் நிறுவனம், அப்பிள் நிறுவனத்தின் மாதிரியை நகல் செய்ததற்காக 539 மில்லியன் டொலர் இழப்பீடாக வழங்க வேண்டும். இழப்பீடு வழங்கலுக்குப் பிறகு, இது தொடர்பாக இரு நிறுவனங்களும் தொடுத்துள்ள மற்ற வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும்’ என்று உத்தரவிட்டது.
இதையடுத்து, சம்சுங் நிறுவனம், அப்பிளுக்கு இழப்பீடு வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், எவ்வளவு பணம் கைமாறியது என்பது குறித்து அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்படவில்லை.
சம்சுங் நிறுவனம் இந்த விவகாரம் குறித்து கருத்துக் கூற மறுத்துவிட்டது. கைத்தொலைபேசிகள் தயாரிப்பில் உலக அளவில் முண்ணனியில் இருக்கும் இரண்டு நிறுவனங்களுக்கு மத்தியில் நடந்த இந்த வழக்கு சர்வதேச அளவில் கவனம் பெற்றது.





