ஸ்டைலுக்கு கூலிங்கிளாஸ் அணிவதை விரும்புகிறவர்கள் கூட, பார்வைக் கோளாறுக்காக கண்ணாடி அணிய விரும்புவதில்லை. இதன் பொருட்டே கண் அறுவைச்சிகிச்சை செய்துகொள்கிறவர்களும் உண்டு.
இந்தப் பிரச்னைக்குப் புதிதாக வழி பிறந்திருக்கிறது. ` சொட்டு மருந்தை கண்களில் விட்டால் போதும். ஆயுளுக்கும் கண்ணாடியும் தேவையில்லை, அறுவைச்சிகிச்சையும் தேவையில்லை’ என்கிறது இஸ்ரேலில் அண்மையில் நடந்த ஓர் ஆய்வு.
அதோடு, `மருத்துவரிடம் கூடப் போகத் தேவையில்லை. உங்கள் ஸ்மார்ட்போன்தான் உங்கள் மருத்துவர். அதைக்கொண்டு பரிசோதித்து, நீங்களே பார்வைக் குறைபாட்டுக்கு தீர்வு கண்டுகொள்ளலாம்’ என்று சொல்லி மேலும் ஆச்சரியப்படவைக்கிறது அந்த ஆய்வு.
கிட்டப்பார்வையோ, தூரப்பார்வையோ…எதுவாகினும் பார்வைக் குறைபாடுகளுக்கு மொபைல் அ ப் உதவியுடன் ‘நானோ டிராப்ஸ்’ (Nanoparticle Eye drops) என்னும் சொட்டு மருந்தைவிட்டு சரி செய்யலாம் என்பதைக் கண்டறிந்திருக்கிறார்கள்.
இஸ்ரேலின் ஷாரே ஸெடெக் மருத்துவ மையமும் (Israel’s Shaare Zedek Medical Center) பார்-இலான் பல்கலைக்கழகமும் (Bar-Ilan University) இணைந்து நடத்திய ஆய்வில் இந்த சொட்டு மருந்து கண்டறியப்பட்டிருக்கிறது.
“முதலில் உங்கள் மொபைல் போனில் இதற்கான பிரத்யேகமான அப்-ஐ பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். மொபைல்போனிலிருந்து வெளிப்படும் லேசர் ஒளியைக்கொண்டு சில நிமிடங்கள் கண்களின் கார்னியாவை ஸ்கேன் செய்ய வேண்டும்.
கடைசியாக, கண்ணில் இந்த டிராப்ஸை விட்டால் போதும்… கிட்டப்பார்வை, தூரப்பார்வைக் கோளாறுகளைச் சரிசெய்துவிடும்” என்கிறார்கள் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டவர்கள்.
முதல் கட்டமாக, பன்றிகளுக்கு இந்தப் பரிசோதனை செய்யப்பட்டு வெற்றிகரமாக முடிந்திருக்கிறது. இந்த ஆண்டின் இறுதியில் மனிதர்களுக்குச் செய்யப்படவிருக்கிறது. இன்னும் இரண்டே ஆண்டுகளில் இந்த நவீன சொட்டு மருந்து, சந்தையில் விற்பனைக்கு வந்துவிடும் என்கிறார்கள்.





