பேரூந்து நிலையத்தில் பழ வியாபாரம் செய்யும் முதியவர் ஒருவர் ஒரு பேரூந்து ஒன்றில் பழக்கூடையுடன் ஏறினார். ” ஐந்து பழங்கள் பத்து ரூபாய் என்று கூவிக் கூவி பழங்களை விற்பனை செய்ய முயன்றார். எவரும் பழம் வாங்க முன்வரவில்லை. கூடையை சுமக்க முடியாமல் சுமந்தபடி அவர் கீழே இறங்கியதும் இளைஞன் ஒருவன் பேரூந்தில் ஏறினான். “ஆறு பழங்கள் பத்து ரூபாய்!” என்று கூவினான், அவனுக்கு நல்ல விற்பனை.
மீண்டும் மற்றொரு பேரூந்தில் ஏறிய முதியவர் அங்கும் ” ஐந்து பழங்கள் பத்து ரூபாய்” என்று கூறி விற்க முயன்றார், அங்கும் பலனின்றி போகவே கீழே இறங்கிவிட்டார். அடுத்து ” ஆறு பழங்கள் பத்து ரூபாய்” என்று கூவியபடி ஏறிய இளைஞன் அனைத்தையும் விற்று முடித்துவிட்டான்.
ஒரு கம்பெனியில் விற்பனை ஆலோசகராக இருக்கும் ஒருவர் இதனை அவதானித்துக் கொண்டிருந்தார். அவர் அம்முதியவரை அழைத்து “அந்த இளைஞனின் சாமர்த்தியம் உங்களுக்கு இல்லையே! அவனுக்கு போட்டியாக நீங்களும் ஆறு பழம் பத்து ரூபாய் என்று விற்றால் தானே மக்கள் வாங்குவார்கள் உங்களிற்கும் விற்பனையாகும். அதிக கொள்முதல் மூலம் குறைந்த விலையில் பழங்களை வாங்கி இலாபத்தை குறைத்து அதிக விற்பனை செய்ய பழகுங்கள் ஐயா” என்று தனது ஆலோசனையை கூறினார்.
அதற்கு அந்த முதியவர் சிரித்துக்கொண்டே “போய்யா…. இந்தப் பழமும் அவனது தான், அந்தப் பழமும் அவனது தான். அவன் என் மகன்தான், ‘ஆறு பழம் பத்து ரூபாய்’ என்று விற்றால் சட்டென வாங்குவதற்கு நம் சனத்திற்கு மனம் வராது, இதுவே ‘ ஐந்து பழம் பத்து ரூபாய்’ என்று நான் கூவிக்கொண்டு போவேன். அவன் வந்து ஆறு பழம் பத்து ரூபாய் என்றதும் “அடடே லாபமா இருக்கே” என்று சனங்கள் சட்டென்று வாங்குவினம். சனங்களின்ட மனத்தை மாத்திறத்துக்குத்தான் என்னை முன்னால அனுப்புறவன், அவன் அக்மார்க் வியாபாரி தம்பி” என்றாரே பார்க்கலாம்.
ஆலோசனை கூறியவர் சிலையாகிப் போனார்….






