எடிசனுக்கு தாய் கற்றுக்கொடுத்தது என்ன?

தோமஸ் அல்வா எடிசன் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த நாளில், ஆசிரியர் அவரிடம் ஒரு கடிதத்தைக்கொடுத்தது அந்தக் கடிதத்தை அவரின் அம்மா மட்டுமே படிக்க வேண்டும் என்றும் சொல்லியிருந்தார். இதன்படி அவரும் அக்கடிதத்தை அம்மாவிடம் கொடுத்தார். அதைப் படித்த எடிசனின் அம்மாவின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. கடிதத்தில் என்ன எழுதியிருக்கின்றது என்று எடிசனும் கேட்டார். ” உங்கள் மகன் மிகவும் புத்திசாலி. அவனின் அறிவிற்கு ஏற்றளவில் இந்தப் பள்ளி இல்லை, அதனால் எடிசனை வீட்டில் வைத்தே படிக்க வையுங்கள்” என்று அம்மா உரக்கப்படித்தார். இதைக்கேட்ட எடிசன் உற்சாகமாக சத்தமிட்டார்.

ஆண்டுகள் வேகமாக கடந்தன. தோமஸ் அல்வா எடிசன் புதிய புதிய கண்டுபிடிப்புக்கள் மூலம் உலகமே போற்றும் மகத்தான விஞ்ஞானியாக திகழ்ந்தார். அவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருந்தன. ஒரு நாள் எடிசனின் அம்மாவும் இறந்துபோனார். அதன்பின் 
சில நாட்கள் கழித்து எடிசன் வேறு ஏதோ தேடுகையில், சிறு வயதில் ஆசிரியர் கொடுத்தனுப்பிய கடிதம் கிடைத்தது. தன்னைப்பற்றி உயர்வாக எழுதிய கடிதத்தை மீண்டும் படிக்க ஆசைப்பட்டு படத்தார். ஆனால் அந்த கடிதத்தில் இருந்த வரிகள் அவரின் அம்மா வாசித்தவை அல்ல.
 
” உங்கள் மகனின் மனநிலை சரியில்லை எனக் கருதுகிறோம். அவனை எங்கள் பள்ளியில் தொடர்ந்து படிக்க அனுமதிக்க முடியாது.” என இருந்தது. அக்கடிதத்தைப் படித்ததும் எடிசன் உறைந்து விட்டார். இந்த விடயம் தன் சிறிய வயதில் தெரிந்திருந்தால் எந்தளவுக்கு மனதளவில் முடங்கிப்போயிருப்போம் என்பதை ஒரு நிமிடம் நினைத்து தன்னை உதறிக்கொண்டார். அந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதே பெரிய விடயமாக இருந்தது. தன் உழைப்பையும் முயற்சியையும் பாராட்டி ஊக்கமளித்த அம்மாவை மனதார நன்றியோடு நினைத்துக்கொண்டார். 
 
அந்தக் கடிதத்தை எடிசன் படிக்கவே கூடாது என்றுஅவரின் தாய் நினைத்திருந்தால் அதை எரித்திருப்பார். ஆனால் அதை பின்னைய காலத்தில் எடிசன் பார்ப்பது சரிதான் என நினைத்ததாலேயே அதனைப் பத்திரப்படுத்தி வைத்திருக்கக்கூடும். குழந்தை வளர்ப்பின் ஒவ்வொரு அடியையும் மிகவும் கவனத்துடன் நகர்த்த வேண்டும் என்பதற்கு இதுமிகச் சிறந்த உதாரணம்.
 
குழந்தைகள் நல்லவராவதும் தீயவராவதும் பெற்றோர் கைகளிலேயே தங்கியுள்ளது.

Add Comment