வாழ்தல் என்பது ஒரு கலை, திறன், நுட்பம். அதை முறையாகக் கற்று பயிற்சி செய்வது செல்வச்செழிப்பும் மன அமைதியும் நிறைந்த வாழ்விற்கு அவசியம்.
பகவத்கீதை வாழ்க்கை, வாழ்தல் பற்றி காலத்தால் அழியாத கோட்பாடுகளை விளக்குகிறது. இவை சாதி, மத, இன வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டவை. தெளிவான புத்தியையும், மனதிலே தூய உணர்ச்சியையும் வளர்க்க உதவுகின்றன.
வாழ்வில் ஏற்படும் எல்லா சவால்களையும் – சமூகம், தொழில், குடும்பம் – எதிர்நோக்கும் ஆற்றலை வழங்குகின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக மெஞ்ஞானத்தை, ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் உள்ள முழுமையான பூரணத்துவத்தை உணர வழிகாட்டுகின்றன.
பகவத்கீதையின் 16 வது அத்தியாயம் தெய்வீகம், அசுரம் எனும் இரண்டு வேறுபட்ட பிரிவைச் சேர்ந்த மனிதர்களின் இயல்புகளையும் நடத்தைகளையும் விளக்குகிறது. அசுரத்தன்மை உடையவர்கள் அவர்கள் ஆசைகளை இடையறாது பின் தொடர்ந்து மன உளைச்சலையும் துன்பத்தையும் அனுபவிக்கின்றனர்.
அதே சமயம் தெய்வீக இயல்புடையவர்கள் அறியாமையை அடியாகக் கொண்டு எழும் ஆசைகளை வென்று அமைதியுடனும் சந்தோஷத்துடனும் வாழ்கின்றனர். தங்களுக்குள் உள்ள பூரணத்துவத்தை உணர்ந்து கொள்கின்றனர்.
இந்தியாவில் பூனாவிலுள்ள வேதாந்தக் கல்லூரியில் (Vedanta Academy) பகவத்கீதை ஒழுங்குமுறையாகக் கற்பிக்கப்படுகிறது. உலகின் பல்வேறு பாகங்களிலிருந்தும் வரும் இளைஞர்களும் யுவதிகளும் ஆர்வத்துடன் பகவத்கீதையை கற்றுக் கொள்கின்றனர். வேதாந்தக் கல்லூரியின் ஸ்தாபகரும், உலகம் போற்றும் தத்துவ ஞானியுமான சுவாமி பார்த்தசாரதியின் மகளும் சிஷ்யையுமான சுனந்தாஜி பகவத்கீதையின் 16ஆவது அத்தியாயமான ‘தெய்வீக, அசுர குணத்தை வேறுபடுத்தும் யோகம்’ பற்றி மார்ச் 1 ஆம் திகதியிலிருந்து 4 ஆம் திகதி வரை மாலை 6.30 இல் இருந்து 8.00 மணி வரை கொழும்பு 05, ஹவ்லொக் வீதி – தும்முள்ள சந்தியில் அமைந்துள்ள பௌத்த கலாசார மண்டபத்தில் சொற்பொழிவாற்றுவார். அனைவரும் பங்குபற்றி பயன் பெறவும்.







