காகிதத்தால் ஆன மின்கலம்!

பார்சிலோனாவைச் சேர்ந்த, ‘பியூயலியம்’ என்ற ஆய்வு மையம், காகிதத்தால் ஆன மின் கலனை வடிவமைத்திருக்கிறது.

இந்த புரட்சிகரமான மின் கலன், 1 வோல்ட் முதல் 6 வோல்ட் வரை மின் உற்பத்தி செய்யும் திறன் படைத்தது. இன்று நோயறிய உதவும் கருவிகளில் பொத்தானைவிட சிறிய அளவே உள்ள மின் கலன்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இவற்றை ஒருமுறை பயன்படுத்திய பின் துாக்கி எறிந்துவிடுவர். இதனால், பொத்தான் மின் கலன்களில் உள்ள நச்சுப் பொருட்கள் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கின்றன. பியூயலியத்தின் காகித மின்கலத்தில்  வேதிப் பொருட்கள் எதுவும் இல்லை.
மாறாக, நோயறிவதற்காக பயன்படுத்தப்படும் இரத்தம் மற்றும் சிறுநீர் போன்றவை, காகிதத்தின் மீது படும்போது ஏற்படும் வேதி மாற்றத்தின் மூலம் மின்சாரம் உற்பத்தியாகிறது.

இந்த மின்சாரத்தை வைத்து நோயறியும் கருவியிலுள்ள உணரிகள் மற்றும் திரை ஆகியவற்றுக்கு போதிய மின்சாரம் கிடைக்கும்.
இரத்தப் பரிசோதனை, கருத்தரித்திருப்பதை அறியும் பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை போன்றவற்றுக்கான கருவிகளுக்கு இக்காகித மின்கலன் உற்பத்தி செய்யும் மின்சாரமே போதும் என இதன் கண்டுபிடிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒரு முறை பயன்படுத்தி குப்பையில் போடப்படும் பல நோயறியும் கருவிகளை தயாரிக்கும்போதே, பியூயலியம் மின் கலன்களையும் சேர்த்து தயாரிக்க முடியும்.
இது போன்ற காகித மின்கலங்களை  பெரிய கருவிகளிலும் பயன்படுத்த முடியுமா… என ஆய்வுகள் நடக்கின்றன.

Add Comment