அரசியல்வாதிகளுக்கு ஆப்பு வைக்கப் போகும் ரோபோ

முதன்முறையாக நவீன தொழில்நுட்பத்தில் செயற்கையான முறையில் புத்திசாலி அரசியல்வாதியை உருவாக்கும் முயற்சியில் நியூசிலாந்து வல்லுநர்கள் ஈடுபட்டுள்ள அதேவேளை, இந்த செயற்கை அரசியல்வாதியை 2020 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் களமிறக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் நாடுகளுக்கு இடையே அரசியலமைப்பு சட்டங்கள், கலாசாரங்கள் மாறினாலும் மாற்றமே இல்லாதவர்கள் அரசியல்வாதிகள் தான். அவர்களின் குணாதிசயங்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவை.

உண்மையே பேசக்கூடிய, மக்கள் நலனில் மட்டுமே அக்கறை கொள்ளக்கூடிய வகையில் புத்திசாலித்தனத்துடன்  கூடிய  செயற்கையான அரசியல்வாதியை வடிவமைக்கும் முயற்சியில் நியூசிலாந்து தொழில்நுட்ப வல்லுநர்கள் ஈடுபட்டுள்ளனர். வெலிங்டனைச் சேர்ந்த 49 வயதான தொழிலதிபர் நிக் கேரிட்சன் தலைமையில் வடிமைக்கப்பட்டு வரும் இந்த செயற்கை அரசியல்வாதிக்கு ‘சாம்’ என பெயரிடப்பட்டுள்ளது. இது உள்ளூர் பிரச்சினை குறித்து மக்கள் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்கும். வீட்டு வசதி, கல்வி, குடியேற்றம் குறித்த அரசின் கொள்கைகள் குறித்தும் விளக்கம் அளிக்கும். தற்போது இந்த முயற்சி ஆரம்ப கட்டத்தில் உள்ளது. விரைவில் இந்த செயற்கை அரசியல்வாதியை முழு திறமை படைத்ததாக மாற்றும் முயற்சி தீவிரமாக நடந்து வருவதாக நிக் கேரிட்சன் கூறியுள்ளார்.

பருவநிலை மாற்றம், சமத்துவமின்மை போன்ற முக்கிய பிரச்சினைகள், மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் சிக்கல் நிலவி வருகிறது. இவற்றுக்கு செயற்கை அரசியல்வாதி மூலம் தீர்வு காண முடியும். சாதாரண அரசியல்வாதிகளை விட செயற்கை அரசியல்வாதி மிகச்சிறப்பாக செயல்படுபவராக இருப்பர் என நிக் கேரிட்சன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சமூக வலைத்தளம் மூலம் மக்கள் பிரச்சினைகளை உடனுக்குடன் அறிந்து அது குறித்த ஆய்வை விரைந்து அது மேற்கொள்ளும். பல நாடுகளுக்கு இடையே அதிகரித்து வரும் அரசியல் மற்றும் கலாசார பிளவுகளுக்கு ஒரு பாலமாக செயற்கை அரசியல்வாதி செயற்படுவார். 2020 ஆம் ஆண்டு நியூசிலாந்தில் பொதுத்தேர்தல் இடம்பெறவுள்ளது. அதில், ‘சாம்’ அரசியல்வாதியை களமிறக்க நிக் கேரிட்சன் திட்டமிட்டுள்ளார். அந்நாட்டு சட்டம் அனுமதிக்கும் பட்சத்தில் இந்த முயற்சி வெற்றியடையும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

#Artificially #Intelligent #Politician #NewZealand

Add Comment