வெற்றிக்கான வழிமுறைகள்….

1. ஒருவனுக்குப் பணமும் பதவியும் கல்வியும் திறமையும் இருக்கலாம். ஆனால் அவன் தன்னடக்கம் இல்லாமல் வாழ்ந்தால் இவை யாவும் சோபிக்காமல் போய்விடுகின்றன. வாழ்க்கையில் முன்னேறுவதற்கு முதற்படி, அடக்கமாக இருக்கப் பழகிக் கொள்வதுதான்.

2. உறுதியற்ற தன்மை உங்கள் பண்பைக் கெடுக்கிறது. உங்களால் உறுதியாக எந்த முடிவையும் எடுக்க முடிவதில்லை. எனவே உறுதியாகவும் மனோ திடத்துடனும் சிந்திக்கவும் செயற்படவும் பழகுங்கள். உங்களைப் பிறர் நம்பும் விதமாக, ஒரே விதமான நல்ல பண்புகளுடன் வாழுங்கள். அப்போது உங்களுக்குப் பிறருடைய அன்பும் ஆதரவும் கிடைக்கும்.

3. இன்று செய்ய வேண்டியதை நாளைக்கு என்று தள்ளிப் போடாதீர்கள். தள்ளிப் போடுவதும் தாமதப்படுத்தும் காரியத்தை முடிக்க உதவுவதில்லை. நாட்கள் செல்லச் செல்ல அவற்றின் பொறுப்பும் சிக்கலும் அதிகமாகிவிடும். நம்முடைய முயற்சியின் வேகமும் மங்கி, முன்னேற்றமும் தடைப்பட்டுப்போம். “நாளைக்கு செய்வேன்’ என்றெல்லாம் சொல்பவன் எதையும் என்றைக்குமே செய்யமாட்டான். தாமதமின்றி உடனே முடிவெடுங்கள். அதை செயற்படுத்தத் தாமதிக்காதீர்கள்.

4. உங்களை நம்புங்கள். கடவுள் உங்களுக்கு அருளியுள்ள திறமையின் மீது நம்பிக்கை வையுங்கள். அதைப் பயன்படுத்தத்தான் அவர் உங்களுக்கு இதை அளித்திருக்கிறார் என்று புரிந்து கொள்ளுங்கள். அதை நல்லமுறையில் நல்ல காரியங்களுக்காகப் பயன்படுத்துங்கள். அஞ்சாமல் துணிந்து செயல்பட பழகிக் கொள்ளுங்கள்.

5. பிறர் பொருளுக்கு ஆசைப்படுவதும் ஏராளமாகச் சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பதும் பேராசையாகும். இவை மன அமைதியைக் குலைக்கிறது. பேராசைக்காரர்களிடமிருந்து எல்லா விதமான நல்ல பண்புகளும் விடை பெற்றுக் கொண்டு போய் விடுகின்றன. பேராசையே பாவம் செய்யத் தூண்டுகிறது. ஆகவே, உங்களுடைய ஆசைகளைக் கட்டுப்படுத்துங்கள். கிடைத்ததைக் கொண்டு திருப்தி அடையப் பழகிக் கொள்ளுங்கள். மன நிறைவுடன் அமைதியாக இருங்கள்.

6. உங்களுக்கு தைரியமும் சாமர்த்தியமும் இருந்தாலும், தன்னம்பிக்கை இருந்தால்தான் வெற்றி கிடைக்கும். சாதாரண மனிதர்கள் வெற்றியை அடைகிறார்கள். திறமைசாலிகள் மனம் குழம்புவதால் தோல்வியைத் தழுவுகிறார்கள். மனக் குழப்பமின்றி தன்னம்பிக்கையுடன் செயற்படுங்கள்.

7. எதுவும் நல்லதற்கே என்று எண்ணுங்கள். எந்த முயற்சியையும் நல்லபடியாகச் செய்யுங்கள். அதன் முடிவு இறைவனுடையது என்று விட்டுவிடுங்கள். சோர்வு, சோம்பல், அயர்ந்திருத்தல் இவை பின்தங்கிய உணர்ச்சிகளின் அடையாளம். சுறுசுறுப்பு, செயல்வேகம், அகமலர்ச்சி ஆகியவை முன்னேறும் உணர்ச்சிகளின் அடையாளம்.

8. மிகச் சிறந்த பண்பு சகிப்புத் தன்மைதான். நம்மை விட உயர்ந்துவிட்டால் அதை நம்மால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. ஆகவே சகிப்புத்தன்மை இல்லாமல் போவது இத்தகைய சிறுமை தரும் உணர்வுகளால் தான். சிந்தித்துப் பார்த்தால் இவை பெரும்பாலும் நியாய மற்றதாகவே இருக்கும்.

9. பொறாமையும் வெறுப்புமே ஒருவனைத் தீய வழிக்கு அழைத்துச் செல்கிறது. தியாக உணர்வு வரும்போது இந்த இரண்டுமே மறைந்து போய் விடுகின்றன. எனவே, பிறருக்காக விட்டுக் கொடுக்கப் பழகிக் கொள்ளுங்கள். வீட்டிலும் வெளியிலும் குடும்பத்துக்காகவும் நாட்டுக்காகவும் தொண்டுள்ளம் கொண்டு வாழப் பழகுங்கள். உரிமையை மறந்து கடமையைச் செய்தால் வெற்றியை அடைவீர்கள்.

10. ஆசையும் கோபமும் சேர்ந்தே மனிதனைக் கெடுக்கிறது. பால் தயிராவதைப் போல, ஆசை கோபமாக மாறுகிறது. குரூரம், பதட்டம், பொறாமை, பிறர் பொருள் மீது ஆசை, அபகரித்தல், கொடிய வார்த்தை கூறுதல், கொடியவனாக இருத்தல் ஆகிய தீய பண்புகள் கோபத்தின் அடிப்படையில்தான் உண்டாகின்றன. கோபம் மற்ற நல்ல பண்புகளை அழிக்கும். நம்முடைய கண்களை மறைக்கும். நம்மால் திறமையுடன் செயல்பட முடியாது. அது நம்முடைய மன அமைதியைக் கெடுக்கும். கோபத்தைக் கைவிட்டு, சாந்தமுடன் பழகக் கற்றுக் கொள்ளுங்கள்.

முடிந்தளவு இப்படிமுறைகளை பின்பற்றி வாழ பழகுங்கள். வெற்றிக்கனி மிகத்தொலைவில் இல்லை……….

Add Comment