4500 ஆண்டுகள் பழமையான மொழி தமிழ்: ஆய்வில் தகவல்

தமிழ் உட்பட 82 மொழிகளை உள்ளடக்கிய திராவிட மொழிக்குடும்பம் 4,500 ஆண்டுகள் பழமையான மொழி என ஆய்வில் தெரியவந்துள்ளது. இதில் மிகப் பழமையான மொழி தமிழ் தான் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனியின் மேக்ஸ் பிளான்க் கல்வி நிறுவனமும் டேராடூன் இந்திய வன உயர் கல்வி நிறுவனமும் இணைந்து மொழி ஆராய்ச்சி நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டன.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தெற்காசிய பகுதி 600 மொழிகளின் தாயகமாக விளங்கியுள்ளது. அவை திராவிடம், இந்தோ-ஐரோப்பா, சீனா-திபெத்தியம் உட்பட 6 மொழிக் குடும்பங்களின் கீழ் வகைப்படுத்தப்பட்டு ஆராயப்பட்டன. இந்த 6 மொழிக் குடும்பங்களில் முதன்மையானதும் பழமையானதும் திராவிட மொழிக்குடும்பமே. இது சுமார் 4,500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட சுமார் 80 மொழிகளை உள்ளடக்கிய திராவிட மொழியை 22 கோடி மக்கள் தற்போது பேசுகின்றனர். இதில் பழமையான மொழி தமிழ். சமஸ்கிருதம் போல் சிதைந்து போகாமல் தமிழ் மொழியின் கல்வெட்டுக்களும் காப்பியங்களும் தற்காலம் வரை காணக்கிடைக்கின்றன. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add Comment