சர்வதேச மகளிர் தினம்

போராடி உரிமைகள் பெற்ற மார்ச் 8ம் தேதி, இன்று சர்வதேச மகளிர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. பெண்கள் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் வகையிலும், அவர்களின் சாதனைகளை கொண்டாடும் வகையிலும் இந்த நாள் அமையும்.

சீனா, ரஷ்யா, அர்மேனியா, அசர்பெய்ஜான், பெலாரஸ், பல்கேரியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், மாசிடோனியா, மால்டோவா, மங்கோலியா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் வியட்நாம் உள்ளிட்ட நாடுகளில் மகளிர் தினத்தை பொது விடுமுறையாக அறிவித்துள்ளனர். ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் உரிமைகளை வழங்க வேண்டும் என்று கேட்டு போராடியதை குறிப்பிடும் வகையில் கொண்டாடப்படுவதுதான் மகளிர் தினம்.

அதனால்தான் இனம், மொழி, கலாசாரம், பொருளாதாரம், அரசியல் என பல்வேறு வேறுபாடுகளை மறந்து பெண்கள் தினம் அனைத்து பெண்களாலும் கொண்டாடப்படுகிறது.
மார்ச் 8ம் தேதிக்கும் மகளிருக்கும் என்ன சம்பந்தம் உண்டு என்று நீங்கள் யோசிக்கலாம்? நாளுக்கு நாள் பெண்களின் அறிவாற்றல், தலைமைத்துவம், பங்கேற்பு ஆகியவை ஒருபுறம் அதிகரித்து வந்தாலும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. அரசியல், சமூக, பொருளாதார மற்றும் கலாசார ரீதியான உரிமைகள் உலக நாடுகளில் பெண்களுக்கு எட்டாக் கனியாகவே உள்ளன.

1789ம் ஆண்டு ஜூன் 14ம் தேதி சமத்துவம், பிரதிநிதித்துவம் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து பிரான்ஸ் நாட்டு பெண்கள் போர்க்கொடி உயர்த்தினர். ஆணுக்கு நிகராக பெண்களுக்கும் உரிமைகள் கிடைக்க வேண்டும், வேலைக்கேற்ற ஊதியம், எட்டு மணி நேர வேலை, வாக்குரிமை, அடிமைத்தனத்திலிருந்து விடுதலை ஆகிய முழக்கங்களை அவர்கள் எழுப்பினர். கையில் கிடைத்த ஆயுதங்களை எடுத்து கொண்டு பாரிஸ் நகர தெருக்களில் அணி திரண்டனர். அந்நாட்டு அரசர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோரை கைது செய்வேன் என அறிவித்தார்.
ஆயிரக்கணக்கான பெண்கள் கூட்டத்துடன் ஆண்களும் பெண்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதித்தனர். கொட்டும் மழையிலும் அரசரின் மாளிகை நோக்கி ஊர்வலம் சென்றனர்.
இதை எதிர்பாராத அரசர் அதிர்ந்து போய், கோரிக்கைகளை பரிசீலிப்பதாக உறுதி அளித்து, அனைவரையும் சமாதானப்படுத்தினார். இந்த செய்தி கிரீஸ், ஜெர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க், இத்தாலி மற்ற ஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவியதால் அங்கும் போராட்டம் வெடித்தது.

பிரான்சில், புருஸ்ஸியனில் இரண்டாவது குடியரசை நிறுவிய லூயிஸ் பிளாங்க், பெண்களை அரசவை ஆலோசனைக் குழுக்களில் இடம்பெறச் செய்யவும் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கவும் ஒப்புதல் தந்தார். அந்த நாள் 1848ம் ஆண்டு மார்ச் 8ம் நாள். அந்த தினத்தைத்தான் இன்று உலகம் முழுவதும் மகளிர் தினமாக கொண்டாடுகிறோம்.
கடந்த 1920ம் ஆண்டு சோவியத் ரஷ்யாவில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடந்த பெண்கள் போராட்டத்தில் கலந்து கொண்ட ரஷ்யாவின் அலெக்ஸாண்டிரா செலன்ரா, ஆண்டுதோறும் மார்ச் 8ம் தேதி உலக மகளிர் தினத்தை கொண்டாட வேண்டும் என்று பிரகடனம் செய்தார். இதையடுத்து 1921ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 1975ம் ஆண்டை சர்வதேச மகளிர் ஆண்டாக ஐ.நா. பிரகடனப்படுத்தியது.

உலகில் செல்வாக்கான 10 பெண்கள்:

1. ஏஞ்சலா மெர்கெல் ஜெர்மனி பிரதமர்
2. டில்மா ரூசூப் பிரேசில் ஜனாதிபதி
3. சோனியா காந்தி அகில இந்திய காங்கிரஸ் தலைவி
4. கிறிஸ்டின் லகார்ட் சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர், பிரான்ஸ் நிதி அமைச்சர்
5. கியூன் ஹிபார்க் தென்கொரியா முதல் ஜனாதிபதி
6. வர்ஜீனியா ரொமாட்டி மிகப் பெரிய நிதி நிறுனமான ஐபிஎம் தலைமை நிர்வாக அதிகாரி
7. மார்கரெட் சான் உலகின் சுகாதார அமைப்பு தலைமை அதிகாரி
8. ஜில் அபுராம்சான் பிரபலமான பத்திரிக்கையான நியூயார்க் டைம்ஸ்ன் நிர்வாக அதிகாரி
9. ஜேனட் எலன்அமெரிக்கா பெடரல் ரிசர்வ் துணை அதிபர்
10. இந்திரா நூயிபெப்சிகோ நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி.

Add Comment