விவாகரத்து வேண்டுமா பரீட்சை எழுதுங்கள்…..

கணவன், மனைவி இருவரதும் உடன்பாடில்லாமல் விவாகரத்து கிடைப்பது எளிதான காரியமல்ல. சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள யிபின் மக்கள் நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி வருபவர்களுக்கு ஒரு தேர்வு நடாத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வில் பங்கேற்காதவர்களிற்கு விண்ணப்பம் வழங்கப்படுவதில்லை. நீதிபதி வாங் ஷியு இந்த தேர்வு முறையைக் கொண்டுவந்து இருக்கிறார்.

தற்போது அதிக எண்ணிக்கையான ஜோடிகள் விவாகரத்து கோரி வருகின்றனர். அவர்களுக்கு போதுமான அவகாசம் கொடுத்து ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள வாய்ப்பளிக்க எண்ணினார் வாங் ஷியு. அதற்காகவே தேர்வு முறையை அறிமுகம் செய்துள்ளார்.

கணவனும் மனைவியும் தனித்தனியாக தேர்வு எழுத வேண்டும். 60 மதிப்பெண்களுக்கு மேல் வாங்கி இருந்தால் அவர்களுக்கு விவாகரத்து விண்ணப்பம் வழங்கப்படும். குறைவாக மதிப்பெண் பெற்றால் அவர்களுக்கு விருப்பம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சேர்ந்து வாழ வேண்டியது தான்.

இந்த தேர்வில் கோடிட்ட இடங்களை நிரப்புதல், குறு வினாக்கள், சிறிய கட்டுரை என்று மூன்று பிரிவுகள் உள்ளன. குடும்ப உறுப்பினர்களின் பிறந்த நாள், பிடித்த உணவு, திருமண நாள், அவர்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம், இணையின் நல்ல விடயங்கள், தீய விடயங்கள், குடும்பம் என்பது குறித்து உங்கள் கருத்து போன்ற கேள்விகள் இடம்பெறுகின்றன.

தேர்வு எழுதியவுடன் அந்த தாளை வாங்கி இருவர் முன்பும் நீதிபதி படித்துக் காட்டுவார். சரியான விடயங்களை கோடிட்டு காட்டி, அவர்கள் ஒருவர் மீது ஒருவர் எவ்வளவு அன்பாகவும் அக்கறையாகவும் இருக்கின்றார்கள் என்பதை புரிய வைப்பார். இதன்மூலம் அனேக தம்பதிகள் மீண்டும் சேர்ந்து வாழ முயற்சி செய்வதாக சொல்லி விடுகிறார்கள். இதையும் மீறி விவாகரத்து வேண்டும் என்பவர்களுக்கு விண்ணப்பம் வழங்கப்படுகிறது.

எங்கள் நீதிமன்றத்திற்கு குடும்ப வழக்குகள் தான் அதிகம் வருகின்றன. அதிலும் விவாகரத்து கேட்டு வருபவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். சின்ன சின்ன புரிதல்களில் தான் வாழ்க்கை அடங்கியுள்ளது. இந்த தேர்வு அதைப் புரியவைக்கும். குறைந்த மதிப்பெண் எடுத்தால் விவாகரத்து விண்ணப்பம் என்றால் வேண்டுமென்றே தவறாக எழுதுவார்கள். அதனால் தான் 60மதிப்பெண்களை இலக்கு வைத்தேன்.

கடந்த செப்டம்பர் 14 அன்று ஒரு தம்பதி தேர்வு எழுத வந்தனர். 80, 86 மதிப்பெண்களை ப் பெற்றனர். இதுவரையில் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றது நீங்கள் தான். உங்களுக்குள் நல்ல புரிதல் இருக்கிறது. நீங்கள் ஏன் விவாகரத்து செய்ய வேண்டும் என கேட்டேன். உடனே இருவரும் சேர்ந்து வாழ்வதாகச் சொன்னார்கள். கணவனிற்கு கொஞ்சம் சூதாட்டத்தில் ஆர்வம், மற்றபடி நல்லவர். அவருக்கு தனியாக அறிவுரை கூறி அனுப்பி வைத்தேன்.

தேர்வு வைப்பதன் மூலம் விவாகரத்துக்களின் எண்ணிக்கை கொஞ்சம் குறைந்திருக்கிறது” என்றார் வாங் ஷியு. இந்த விடயம் சமூக வலைத்தளங்களில் அதிக வரவேற்பைப் பெற்று வருகிறது. விவாகரத்து என்பது அவரவர் சொந்த விடயம், இதில் நீதிபதி தலையிட வேண்டிய அவசியம் இல்லை என்று எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

Add Comment