வரலாற்றில் மிகப்பெரிய தொகைக்கு விலைபோன விளையாட்டு வீரர்

ஸ்பெயின் நாட்டின் முன்னணி கால்பந்து கிளப் அணியான பார்சிலோனாவிற்காக விளையாடி வந்த பிரேசில் நாட்டின் முன்னணி வீரரான நெய்மர் (Neymar), பிரான்ஸ் நாட்டின் கால்பந்து கிளப்பான பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் அணிக்கு மாறினார்.

இதற்காக பிஎஸ்ஜி அணி பார்சிலோனாவிற்கு இடமாற்றக் கட்டணமாக 222 மில்லியன் யூரோ வழங்கியது. இதுவே கால்பந்து வரலாற்றில் வழங்கப்பட்ட மிகப்பெரிய தொகையாகும்.

நெய்மர் சென்றதால் அவருக்கு மாற்றாக முன்னணி வீரர் ஒருவரை பார்சிலோனா அணி தேடிவந்த நிலையில் இங்கிலீஷ் பிரிமீயர் லீக் தொடரில் விளையாடும் லிவர்பூல் அணியின் பிரேசில் நாட்டைச் சேர்ந்த பிலிப் கவுட்டினோ தேர்வாகியுள்ளார்.

25 வயதான இவரை கடந்த 2013-ல் இண்டர் மிலன் அணியில் இருந்து 8.5 மில்லியன் பவுண்ஸிற்கு லிவர்பூல் அணி வாங்கியது.

இவர் கடந்த சீசனில் லிவர்பூல் அணிக்காக 14 கோல்கள் அடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் கடந்த ஜனவரி மாதம் லிவர்பூல், கவுட்டினோவுடனான ஒப்பந்தத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நீடித்தது.

இந்நிலையில் நெய்மருக்குப் பதிலாக கவுட்டினோவை வாங்க பார்சிலோனா விரும்பியது. கடந்த ஆகஸ்ட் மாத்தில் இருந்தே பார்சிலோனா அவரை தன்வசம் இழுக்க முயற்சி செய்து கொண்டிருந்தது.

ஆனால் லிவர்பூல் நிர்வாகம் கவுட்டினோவை விட விரும்பவில்லை. கவுட்டினோ பார்சிலோனா செல்வதை வெளிப்படையாக தெரிவித்த போதிலும் லிவர்பூல் விடாப்பிடியாக இருந்தது.

இந்நிலையில் தற்போது மிட் சீசனில் நடைபெறும் டிரான்ஸ்பரில் பார்சிலோனா அணிக்குச் செல்ல கவுட்டினோ முயற்சி செய்தார். இனிமேல் இவரை வைத்தால் வேலைக்கு ஆகாது என லிவர்பூல் அணி நினைத்ததால் கவுட்டினோவை வெளியிட தீர்மானித்தது.

இதுகுறித்து பார்சிலேனா அணியுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது பார்சிலேனா 160 மில்லியன் யூரோ (இந்திய மதிப்பில் 1218 கோடி ரூபாய்) கொடுக்க சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்த தொகை கால்பந்து வரலாற்றில் நெய்மருக்கு அடுத்தப்படியாக வழங்கப்படும் மிகப்பெரிய தொகையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இரு கிளப்புகளுக்கும் இடையில் ஒப்பந்தம் ஏற்பட்ட நிலையில் கவுட்டினோ பார்சிலோனா சென்றுள்ளார். பார்சிலோனா ஐந்தரை ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பார்சிலோனா ஓஸ்மான் டெம்பெல்-ஐ 105 மில்லியன் கொடுத்து வாங்கியது குறிப்பிடத்தக்கது.

Add Comment